தஞ்சாவூர், ஜூலை 29-
தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சாமி.நடராஜன் பேசினார்.
அவர் பேசியதாவது: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி நடப்பாண்டு சாகுபடிக்கு கர்நாடக அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, ஜூன் மாத அளவான 10 டிஎம்சி, ஜூலை மாத அளவான 34 டிஎம்சி தண்ணீரில், கர்நாடக அரசு இதுவரை 12 டிஎம்சி தண்ணீரை மட்டுமே வழங்கியுள்ளது. எனவே இறுதித் தீர்ப்பின்படி மீதமுள்ள தண்ணீரை திறந்து விட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் நமது உரிமையான தண்ணீரை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சாகுபடிக்கு காலத்தோடு மேட்டூர் அணையை திறக்க வேண்டும்.
கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதில் உள்ள குளறுபடிகளை களைந்திட வேண்டும். கேரளத்தில் உள்ளது போல உரித்த முழு தேங்காயை கிலோ ஒன்றிற்கு 25 ரூபாய் என்ற விலையில் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
பாசன ஆறுகள், வாய்க்கால்களை உடனடியாக தூர்வாரி மராமத்து செய்யவேண்டும். தூர்வாரும் பணிகளை கண்காணிக்க விவசாயிகள், அதிகாரிகளை கொண்ட கண்காணிப்பு குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும்.
தமிழகம் மிகைமின் மாநிலம் என முதல்வர் அறிவித்து வரும் நிலையில், விவசாய மின் இணைப்பு கோரி காத்திருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியில், நடுத்தர விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும்.
ஆவின் பால் கொள்முதலில் மதுக்கூர் பகுதி கிராமங்களில் வாரத்திற்கு ஒருநாள் கொள்முதலை நிறுத்தி விடுகின்றனர். எனவே தினமும் விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து பாலையும் கொள்முதல் செய்யவேண்டும். குருங்குளம் அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஆலையில் நடைபெற்ற முறைகேட்டில் சிக்கிய ஒரு சிலர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாமி.நடராஜன் பேசினார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.