விளைவிப்பவர்கள் வாங்குபவர்களிடையே நேரிடையான தொடர்பை உருவாக்கி தரகுச்செலவில்லா நல்ல விலை விவசாயிகளுக்கு கிடைக்கவும் தரமான புதிய காய்கறிகள் மலிவாக மக்களுக்கு கிடைக்கவும் 1999ஆம் ஆண்டு உழவர் சந்தைகள் உருவாக்கப்பட்டன.
மன்னார்குடி உழவர் சந்தையில் விளைவிப்பவர்கள்-விற்பவர்கள்-வாங்குபவர்கள் தங்களது சொந்த உயிரோட்டமிக்க வாடிக்கையாளர் தளத்தை நேருக்கு நேர் உருவாக்கி வைத்துள்ளனர். சுற்றுப்புற கிராமங்களில் காய்கறி உற்பத்தியாளர்கள் வாங்கி விற்பவர்கள் அனைவருமே எளிய விவசாயிகள் தான். எனவேதான் கறவை மாடு, கோழி வளர்ப்பு போன்ற வாழ்வாதார கிராமப் பொருளாதாரத்தில் உழவர் சந்தைகளின் வணிகமும் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக இணைந்துள்ளது இதுதான் மன்னார்குடி உழவர் சந்தையின் தனிச்சிறப்பு.
கும்பகோணம் மொத்த சந்தையின் விலை நிலவரம் நாட்டுக்காய்கறிகளின் வரத்து இவைகளை வைத்து அன்றைக்கன்று காய்கறிகளின் விலை வேளாண் வணிகத்துறை நிர்வாக அலுவலரால் உழவர் சந்தையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இடைத்தரகு இல்லாத வெளிப்படையான நேரிடை வணிகம் என்பதால் வெளிச்சந்தையை விட மலிவாக காய்கறிகள் கிடைக்கின்றன.
கிராமங்களிலிருந்து விளைவித்து கொண்டுவரப்படும் கத்தரி, வெண்டை முள்ளங்கி, முருங்கை, கீரை, வாழைக்காய், மிளகாய், அவரை மற்றும் கும்பகோணம் பெரிய சந்தை கொள்முதலில் கிடைக்கும் மலை காய்கனிகள் சுமார் 75 டன் மன்னார்குடி உழவர் சந்தைக்கு அன்றாடம் வருகின்றன. திரும்ப கிராமங்களின் சிறு கடைகளுக்கு விற்பனை மறு சுழற்சிக்கும் நகர மக்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. எனவேதான் மன்னார்குடி உழவர் சந்தை ஓசூருக்கு அடுத்து மாநிலத்தின் இரண்டாவது சிறந்த சந்தையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக-திமுக லாவணி அரசியல்
1999 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் துவக்கப்பட்டலும் மாநிலத்தின் பல நகரங்களில் உழவர் சந்தைகள் வளர்ச்சியடையவில்லை. அந்நகரங்களில் இருந்த தனியார் சந்தை மற்றும் இடைத்தரகர்களின் அரசியல் செல்வாக்கே இதன் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. இதை களைவதற்கு திமுக அரசு முயற்சிக்கவில்லை. 2001-இல் அதிகாரத்திற்கு வந்த ஜெயலலிதா இதை களைந்து உழவர் சந்தைகளை பயனுள்ளதாக இயக்குவதற்கு பதிலாக இந்த பலவீனத்தை யன்படுத்தி பயனில்லாதவை என உழவர் சந்தைகளை மூடியது. இதில் மிக மோசமான லாவணி அரசியல் இருந்தது.
பின்னர் 2006 இல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக மூடிய உழவர் சந்தைகளை மீண்டும் திறந்தது. விவசாயிகள் வியாபாரிகள் பொதுமக்களது அன்றாட வாழ்க்கையின் பிரிக்க முடியாத பகுதியாக பயனுள்ளதாக மன்னார்குடி உழவர் சந்தை மாறியிருந்த நிலையில் 2001 – 2002 ஆண்டுகளில் அதிமுக அரசு மூடமுடியவில்லை என்பதுதான் இதன் சிறப்பு.
சந்தையின் பிரச்சனைகள் – தேவைகள்
பல பிரச்சனைகளை தேவைகளை மன்னார்குடி சந்தை இன்று எதிர்நோக்கியுள்ளது. குடிநீர் குழாய் வசதி இல்லை.கழிப்பறை இல்லை. ஆவின்-காண்டீன் இல்லை. இதன் வணிகத்தில் பெரும்பகுதி பெண்கள். அவர்களுக்கான சாப்பிட, சற்று ஓய்வெடுக்க அறை இல்லை. சந்தையின் கடைகள் ஆஸ்பெஸ்டாஸ் கூரை குறைந்த உயரத்தில் உள்ளது. கோடை வெப்பத்தில் தினசரி வணிகம் முடிந்து மீத காய்கறிகளை பாதுகாக்க முடியவில்லை. இதற்கெல்லாம் இடவசதி பற்றாக்குறையே காரணம். உழவர் சந்தையின் பின்புறம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் காலி இடம் உள்ளது. இந்த காலியிடத்தை சந்தையோடு இணைத்துக்கொள்ளவும் நல்ல வரிவருவாய் உள்ள சந்தையின் இடப்பிரச்சனையை தீர்ப்பதற்கான முன் முயற்சியை நகர நிர்வாகம் உடனே துவங்க வேண்டும். சந்தையின் கடைகள் கட்டங்கட்டமாய் சிமெண்ட் கட்டிடங்களாக கட்டப்பட்டு மாற்றப்பட்டால் அதன் மேல்தளத்தை பயன்படுத்திக்கொள்ளமுடியும். இதற்கான முன்மொழிவு மற்றும் முயற்சிகளை வேளாண்மை வணிகத்துறை எடுக்கவேண்டும்.
கூட்டுப்பொறுப்பின் சின்னம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உழவர் சந்தைகளின் ஒருங்கிணைப்பாளர் என துறைத்தகவல் கூறுகிறது. எனவே இச்சந்தையின் இடப்பற்றாக்குறைக்கு சந்தையை ஒட்டியுள்ள இடத்தை நகராட்சியிடமிருந்து பெற்று விரிவுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் எடுக்க வேண்டும். சுதந்திர தினத்தன்று சிறந்த நிர்வாக செயல்பாடுள்ள துறை ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பரிசு வழங்குகிறது. மன்னார்குடி நகரம் மட்டுமல்லாது நூற்றுக்கணக்கான கிராமங்கள் உழவர் சந்தையின் வேளாண் சில்லரை வணிகத்தால் மிகப்பெரும் வாழ்வாதார பயனை அடைந்து வருவதால் சிறப்பாக செயல்படும் மன்னார்குடி உழவர் சந்தை ஊழியர்கள் அலுவலர்களுக்கு இந்த ஆண்டு இப்பரிசை வழங்கவேண்டும். இது இச்சந்தையின் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தும். இப்பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் மன்னார்குடி உழவர் சந்தை மாநிலத்தின்முதல் இடத்தை பெற முடியும். மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் நகர்மன்ற நிர்வாகம்-வேளாண்மை வணிகத்துறையின் கூட்டுப்பொறுப்பில்;. இதை நிறைவேற்றமுடியும் என்றாலும் மன்னார்குடி நகர நிர்வாகம்தான் இதில் மு ன்கை எடுக்க வேண்டும் என நகர மக்களும் அருகாமை கிராம விவசாயிகளும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறர்கள்.
மன்னார்குடி நகர நிர்வாகம் செய்யுமா?
– ப.தட்சிணாமூர்த்தி

Leave a Reply

You must be logged in to post a comment.