புதுதில்லி, ஜூன் 21-

நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கல்வித் துறையில் அதிரடி மாற்றங்களையும் செய்து வருகிறது. குறிப்பாக பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க தொடர்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்து மதக் கருத்துக்களை திணிப்பதற்கான முயற்சி என்றும், சமஸ்கிருதத் திணிப்பிற்கு எதிராகவும், பல்வேறு கண்டனங்களும் எழுந்துள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையை மோடி அரசு உருவாக்கி வருகிறது. அதற்காக அமைக்கப்பட்ட கல்விக் குழு அதன் அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.இந்நிலையில், மத்திய கல்வி தேர்வு வாரியம், பல்வேறு பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கொடுத்துள்ளது. இந்த பரிந்துரைகள் பல்வேறு பாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளது.இந்தியப் பள்ளிக் கல்வி அமைப்பையே தலைகீழாக மாற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. பள்ளிக்கல்வியின் தேர்வு முறையில் குறிப்பாக, பத்தாம் வகுப்பு தேர்வினை இரண்டு பகுதியாக நடத்திட வேண்டும் எனவும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறகு கல்லூரி உள்ளிட்ட அனைத்து மேற்படிப்புகளுக்கும் செல்ல தேசிய அளவில் கட்டாயமாக திறனறித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு அமெரிக்காவில் உள்ளது போன்று (எஸ்ஏடி) சாட் தேர்வினை பரிந்துரை செய்துள்ளது.பொதுத் தேர்வு, மொழித் தேர்வு மற்றும் ஒவ்வொரு சிறப்பு பாடத்துக்கும் தேர்வு தனித்தனியாக நடத்தப்படுகிறது.நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுவது, மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்க உதவிடும் என்றும், இத்தேர்வினை இணைய வழியாக நடத்திடவும் பரிந்துரை செய்துள்ளது.இந்திய நாட்டில் உயர் கல்வி செல்லவேண்டுமானால் பல்வேறு வகையான நுழைவுத் தேர்வினை எழுத வேண்டியுள்ளது. இந்த தன்மையை மாற்றிடவே இத்தகைய சாட் தேர்வினை பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.அதேபோல், பத்தாம் வகுப்பு தேர்வினை இரண்டு பகுதியாக நடத்திட வேண்டுமெனவும் பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக, அறிவியல் மற்றும் கணிதம் போன்ற தேர்வுகளில் ஒரே பாடத்திட்டத்திலிருந்தே இத்தேர்வுகள் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.பதினொன்றாம் வகுப்பில் வழக்கமான பாடத்திட்டம் இல்லாமல் தொழிற்கல்விக்கான பாடத்திட்டம் அடிப்படையாக கொண்டிருக்கும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வு முறையை மத்திய பள்ளிக்கல்வி வாரியம் நடத்தும் எனவும் பத்தாம்வகுப்பு தேர்வு விரிவான தொடர் மதிப்பீட்டு முறையாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.இந்த கமிட்டி எதிர்காலத்திற்கு தேவையான பாடத்திட்டத்தை மேம்படுத்திட பரிந்துரை செய்துள்ளது என்றும், தேசியபாடத்திட்ட அமைப்பு – 2005 ஒப்பீட்டளவில் பாடச் சுமையும் குறைக்கப்படும் என்றும் சுய கல்வியை மேம்படுத்தும் வகையில் கவனம் செலுத்தப்படும் எனவும் சமூககட்டமைப்பையும், மத ஒற்றுமை மற்றும்தேசிய ஒருங்கிணைப்பையும் பாதுகாக்கும் எனவும் கூறியுள்ளது.சமஸ்கிருதம்கல்வி கற்றலுக்கான சிறந்த முறை தாய்மொழி வழிக் கல்வி என்பதை ஏற்றுக் கொண்டாலும், இன்றைய தேவைக்கு ஏற்றவாறு மும்மொழி கொள்கையில் மாற்றம் அவசியமாகிறது என்றும், அதன் அடிப்படையில் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.சமஸ்கிருத மொழிக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. சமஸ்கிருதம் ஒரு பாரம்பரிய மொழியாக மட்டுமே கருதக் கூடாது;நமது வாழ்க்கையின் தொன்மையோடு ஒன்றியது; ஆகவே, ஆரம்பக் கல்வி முதல் இடைநிலைக் கல்வி பயிலும் போதே கட்டாயமாக சமஸ்கிருதம் பயிலவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இந்திய நாட்டின் தேசிய மொழி எனஇந்தி முதன்மையான மொழியாக்கப்படும்; இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் இந்தி கற்க வேண்டியது அவசியம்; உலகின் அனைத்து எல்லையிலும் பேசப்படும் ஆங்கிலம் நமது அறிவை விரிவு செய்யும் உலக தொடர்பு மொழி; எனவே கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. விளையாட்டு கல்விக்கு பள்ளிக் கல்வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தனித்த நிதி ஒதுக்கீட்டையும் பரிந்துரை செய்துள்ளது. வேறு காரணத்திற்காக அந்நிதி பயன்படுத்தக் கூடாது. இளைய இந்தியாவை உருவாக்கும் வகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் யோகா கல்விக்குபள்ளிக் கல்வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பரிந்துரைகளையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு மத்தியக் கல்வி தேர்வு வாரியம் வழங்கியுள்ளது.இந்திய கல்வியை இந்துத்துவமயமாக்கும் நோக்கத்துடன் புதிய கல்விக் கொள்கையில் இத்தகைய பல்வேறு திணிப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: