அகர்தலா, ஜூன் 15-

மாநிலத்திற்குத் தேவையான ரத்தத்தில் 97 சதவிகிதத்தைத் தன்னார்வம் மூலமாகத் திரட்டுவதில் திரிபுரா மாநிலம் வெற்றி கண்டுள்ளது.

இந்தியாவில் ஆறு மாநிலங்கள்தான் 95 சதவிகிதத்திற்கு மேலான ரத்தத்தை தன்னார்வம் மூலமாகத் திரட்டுவதில் வெற்றி கண்டுள்ளன. திரிபுரா, தமிழ்நாடு, அருணாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் அரியானா ஆகிய அந்த ஆறு மாநிலங்களில் திரிபுராதான் அதிக அளவில் திரட்டுகிறது. 2015-16 ஆம் ஆண்டில் 100 சதவிகிதம் என்ற இலக்கோடு நாங்கள் ரத்த தான முகாம்களுக்கு ஏற்பாடு செய்தோம். 97 சதவிகித ரத்தத்தைத் திரட்டுவதில் வெற்றி பெற்றாலும், அடுத்த ஆண்டு 100 சதவிகிதத்தை எட்டுவோம் என்ற இலக்கோடு எங்கள் பணி தொடர்கிறது என்கிறார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பாதல் சவுத்திரி.

மாநில முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவருமான மாணிக் சர்க்கார் இதுவரையில் ஆறுமுறை ரத்த தானம் செய்திருக்கிறார். அவருடைய இந்த முயற்சி மக்கள் மத்தியில் ரத்த தானத்திற்கான உத்வேகத்தை அளித்தது. உலக ரத்த தான தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 2015-16 ஆம் ஆண்டில் 765 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 29 ஆயிரம் பேர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். தன்னார்வத்துடன் ரத்தம் வழங்குவது ஒரு திருவிழா போன்ற நிகழ்வாக திரிபுராவில் மாறியுள்ளது. பெண்களும், இளைஞர்களும் மேலும் உற்சாகத்துடன் இந்த முகாம்களில் பங்கேற்க வேண்டும். நடப்பாண்டில் 35 ஆயிரம் பேர் ரத்த தானம் வழங்க வேண்டும் என்ற இலக்கோடு நமது பணி தொடரட்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், மாநிலத்தின் மக்கள் தொகையில் ஐந்து சதவிகிதம் பேர் தன்னார்வத்துடன் ரத்த தானம் வழங்கினால், ரத்த தானத்தில் நாட்டிலேயே முதலிடம் என்பதோடு, ரத்தம் பற்றாக்குறையாக இருக்கும் மாநிலங்களுக்கும் தர முடியும். அதேபோல், கண்தானத்திலும் திரிபுரா நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. விரைவில் தன்னார்வத்துடன் கண்களை தானம் செய்வதில் திரிபுரா முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே எங்களது ஆசையாகும் என்றார். சராசரியாக 39 ஆயிரம் யூனிட் ரத்தம் நாடு முழுவதும் தேவைப்படுகிறது. திரிபுரா அரசு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் இவை முழுவதையும் தன்னார்வ ரத்த தானம் மூலமாகவே பெற்றுவிட முடியும் என்கிறார்கள் ரத்த தான ஆர்வலர்கள்.

Leave A Reply

%d bloggers like this: