புதுச்சேரி, ஜூன் 15-

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியிடப்பட்டன.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு புதுச்சேரியில் 150 இடங்களும், காரைக்காலில் 50 இடங்களும் என மொத்தமுள்ள 200 இடங்களுக்கு அகில இந்திய அளவில் கடந்த 5-ந் தேதியன்று நுழைவுத் தேர்வு நடைபெற்றது.இதில் 1,08,554 பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் ஜூன் 13-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்று முடிவுகள் வெளியிடப்படாமல் வருகின்ற  17-ந் தேதி  முடிவுகள் வெளியாகும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும்,  பெற்றோர்களும் ஜிப்மர் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த ஜிப்மர் மருத்துவக் கல்லூரி டீன் மருத்துவர் மகாதேவன், தொழில் நுட்ப கோளாறு காரணமாக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிட முடியவில்லை என்றும் , 14-ந் தேதி வெளியாகும் என்று கூறினார். அதன் பின்னர் அவர்கள்  போராட்டத்தை   கைவிட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி வரை தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று மீண்டும் கல்லூரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை அக்கல்லூரியின் டீன் மகாதேவன் அறிவிப்பு பலகையில் ஒட்டினார். மேலும் jipmer.edu.in என்ற இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  வெற்றி பெற்றவர்களுக்கு வருகின்ற ஜூன் 20-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் புதுச்சேரி மாணவர்களுக்கு 40 இடங்களும், காரைக்கால் கல்லூரியில் புதுச்சேரி மாணவர்களுக்கு 14 இடங்களும் என மொத்தமாக 54 இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.மற்ற இடங்கள் அகில இந்திய அளவில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

You must be logged in to post a comment.