புதுச்சேரி, ஜூன் 6-
புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட  நாரயணசாமி மின்கட்டண சலுகை, 20 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட 6 அம்ச திட்டங்களை அறிவித்தார்.

புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் வழக்கமாக ராஜ்நிவாஸில் நடைபெறும் விழா, இம்முறை கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்றது.
இந்த விழாவில் நாராயணசாமி பதவி ஏற்றார். அவருக்கு துணை நிலை முதல்வர் கிரண்பேடி  பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி, கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜஹான், கமலக்கண்ணன் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

பதவியேற்பிற்கு பின்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது : முதலாவதாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். இதுவரை வழங்கப்பட்டு வந்த 10 கிலோ இலவச அரசி தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி படிப்படியாக உயர்த்தி வழங்கப்படும். முதல் கட்டமாக ஆகஸ்ட் மாதம் முதல் 20 கிலோ அரிசி வழங்கப்படும். தேர்தல் காலத்தில் மூன்றுமாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ அரிசி உடனடியாக கொடுக்கப்படும்.

 மீனவர்களுக்கு டீசல் மானியம் உயர்த்தி வழங்கப்படுகிறது. அதன்படி மரம் மற்றும் பைபர் படகுகளுக்கான டீசல் மானியம் 35 ஆயிரம் லிட்டரில் இருந்து 40 ஆயிரம் லிட்டராகவும், எப்.ஆர்.பி. படகுக்கு 25 ஆயிரம் லிட்டரில் இருந்து 35 ஆயிரமாகவும், 20 அடி உயர எப்.ஆர்.பி. படகுக்கு 5 ஆயிரம் லிட்டரில் இருந்து 6 ஆயிரம் லிட்டர் வரையும் உயர்த்தி வழங்கப்படும். விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். மருத்துவ இடர்பாடு திட்டத்தின் கீழ் மருத்துவ நிதியுதவி பெறுவதற்கான வருமான உச்சவரம்பு 75 ஆயிரத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்படும். அதுபோல் நிதியுதவியும் ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படும்.

ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அவர்களின் மேம்பாட்டிற்கு மட்டுமே செலவு செய்யப்படும். மின் நுகர்வோர் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படும். முதல் கட்டமாக 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 50 சதவீதம் வரை கட்டணம் குறைக்கப்படும். இதன் மூலம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் பயனடைவர். சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வைத்திருப்பது, தரமான கல்வி, இளைஞர் முன்னேற்றம், பெண்கள் பாதுகாப்பு ஆகியவைகள்தான் எங்களது திட்டம்.

கவர்னரின் எண்ணமும், எங்களின் எண்ணமும் ஒன்றாக இருப்பதால் அவருடன் இணைந்து பணியாற்றுவோம்.அரசு ஊழியர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். உழவர்கரை மற்றும் புதுச்சேரி நகராட்சிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கும் ஏற்பாடு செய்வோம் என்று கூறினார். முன்னதாக  முதல்வர் பதவி ஏற்பு விழாவில் எதிர்க்கட்சியினர்  பங்கேற்காமல் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.