மும்பை, மே 30 –
பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியாரினி பிரக்யா சிங் தாக்கூர், தனக்கு ஜாமீன் கேட்டு, மும்பை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு ஜூன் 6-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், தனக்கு தொடர்பு உள்ளதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று தேசிய புலனாய்வு முகமையே (என்.ஐ.ஏ.) கூறிவிட்டதால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று பிரக்யா சிங் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல குஜராத் மாநிலம் மடோசா என்ற இடத்தில் அதே நாளில் ஒரு குண்டு வெடித்தது. மாலேகான் சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர். குஜராத்தில் நடந்த சம்பவத்திலும் ஒருவர் உயிரிழந்தார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணையை முடித்த, மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமை, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மே 13-ஆம் தேதியன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில், பெண் சாமியாரினி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், கர்னல் புரோகித், சிவ நாராயண் கல்சங்கரா, சியாம் பவர்லால் சாகு, பிரவீண் தக்கல்கி, லோகேஷ் சர்மா, டான் சிங் சவுத்ரி ஆகிய 7 பேர் குண்டுவெடிப்புக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

எனினும், இவ்வழக்கை முதலில் நடத்திய மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்புப்படை பிரக்யா சிங் உள்ளிட்ட அபினவ் பாரத் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து அறிக்கை தாக்கல் செய்துள்ளதால், இவ்வழக்கில் பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோரை விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

ஆனால், எப்படியாவது வெளியே வந்துவிட வேண்டும் என்று கருதிய பிரக்யா, உஜ்ஜைனி கும்பமேளாவில் தன்னை கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சிறையிலேயே உண்ணாவிரதம் தொடங்கி, பின்னர் அதைக் கைவிட்டார். தற்போது, என்.ஐ.ஏ. அறிக்கையைக் காரணம் காட்டி, தன்னை ஜாமீனில் விடுமாறு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு ஜூன் 6-ஆம் விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.