கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி அளவிற்கு மறைமுக வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. ரூ.21 ஆயிரம் கோடி கருப்புப் பணம் பதுக்கப்பட்டிருக்கிறது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இப்படி அரசை ஏமாற்றி வருபவர்கள் அவர்கள் ஏமாற்றியிருக்கும் மொத்த மதிப்பில் 45 சதவிகிதம் செலுத்தினால் மீதம் இருக்கும் 65 சதவிகிதத்தையும் அவர்களே அனுபவித்துக் கொள்ளலாம். வழக்கு, சிறைத்தண்டனை எதுவும் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இது ஏதோ தமது அரசின் சாதனை போன்று மாறி மோடி தலைமையிலான அரசு அறிவித்து வருகிறது. ஆனால் உண்மையில் இது வரி ஏய்ப்பாளர்களை சிறு துரும்பு கூட படாமல் பாதுகாக்கும் நடவடிக்கையே ஆகும். ஒருவன் ஒரு வீட்டை உடைத்து பணம் நகையை கொள்ளையடித்து சென்று விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை காவல்துறையினர் பிடித்து கொள்ளையடித்த பணத்தில் இருந்து 45 சதவிகிதத்தை மட்டும் வாங்கி கொண்டு, மீதம் 65 சதவிகித பணத்தை அவனிடமே அளித்து மனம் நோகாமல் வீட்டிற்கு அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்!. அந்த வேலையைத்தான் தற்போது மோடி அரசு செய்கிறது.

வரி ஏய்ப்பு என்பது ஒரு கிரிமினல் குற்றம். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை அளிப்பதற்கு பதிலாக பரிசு வழங்கும் நடவடிக்கையாகவே மத்திய அரசின் செயல் இருக்கிறது. காரணம் இது போன்று வரி ஏய்ப்பவர்கள் எல்லாம் சாதாரண நபர்கள் அல்ல. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெருமுதலாளிகள் ஆவார். ஆகவேதான் மோடி அரசு அவர்களை கெஞ்சிக்கூத்தாடுகிறது. ஆடம்பர சொகுசு கார்கள், விலைமதிப்புள்ள நுகர்பொருள்கள், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்டவற்றின் விற்பனை விபரங்களை ஆராயும் போது அவற்றை வாங்கும் பெரும்பகுதியினர் மிகக்குறைந்த வரியை செலுத்தி தப்பித்துக் கொள்கின்றனர் என்பது புள்ளிவிபரங்களின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

ஏற்கனவே இவர்கள் வேளாண் வருவாய் என பொய்க்கணக்கு காட்டி வருமான வரி ஏய்ப்பை செய்துவருகின்றனர் என்று அருண்ஜெட்லி கூறியிருந்தார். பெயர்களை வெளியிட்டால் பல அரசியல் பிரமுகர்களும் சிக்குவார்கள் என மிரட்டியிருந்தார். ஆனால் இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த இரு ஆண்டுகளில் கருப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக 1464 வழக்குகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் இது முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 25 சதவீதம் அதிகமாகும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டுகளைவிட கூடுதலாக கருப்புப் பணத்தை பிடித்திருக்கிறோம் என்று சொன்னால் அதை சாதனையாக ஏற்றுக் கொள்ளலாம். மாறாக கருப்புப் பண பேர்வழிகளுக்கு சலுகை அளித்துவிட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறுவது வெறும் ஏமாற்று வேலையன்றி வேறல்ல.

மேலும் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 21 ஆயிரம் கோடி கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதாம். 2013ஆம் ஆண்டின் சர்வதேச அறிக்கையின் படி சுவிஸ் வங்கியில் மட்டும் இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.12 லட்சம் கோடி இருக்கிறது என உறுதிப்படுத்தப்பட்டது. நான் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15லட்சம் செலுத்துவேன் என மோடி சவடால் அடித்தார். ஆனால் இன்றுவரை ஒரு நயா பைசா கூட வரவில்லை. சரி உள்நாட்டில் கண்டுபிடித்திருக்கும் கருப்புப் பணத்தையாவது கைப்பற்றலாமே. அதற்கும் மோடி அரசிற்கு துணிவில்லை. மாறாக அவர்களை காப்பாற்றும் நடவடிக்கையே தொடர்கிறது. இது தேசத்திற்கு அரசே செய்யும் பச்சை துரோகம் ஆகும்.

எளிய மக்களுக்குச் செல்லும் மானியத்தை வெட்டுவதில் அதீத ஆர்வம் காட்டும் மோடி அரசு மறுபுறத் தில் கருப்புப் பண பேர்வழிகளுக்கு கருணை மழை பொழிகிறது . இதுதான் அவர்களின் வர்க்கப் பாசம்.

Leave A Reply