ஜெய்பூர், மே 1-
ராஜஸ்தான் மாநிலம், ஜாம்தோலியில் இருக்கும் அரசு நடத்தும் மறு வாழ்வு முகாமில் கடந்த வாரத்தில், சுத்தமில்லாத குடிநீரைக் குடித்ததன் காரணமாக 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகினர்.
ராஜஸ்தான் மாநிலத்தில்  அரசு மறு வாழ்வு முகாம் நடத்தி வருகிறது. இந்த முகாமில் இருந்தவர்களில் கடந்த வாரம் திடீரென 15 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இவர்கள் அனைவரும்  மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதில் சிகிச்சை பலனின்றி  7 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 3 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மறுவாழ்வு முகாமில் இருந்தவர்களின் திடீர் உடல்நலக்குறைவிற்கு சுத்தமில்லாத குடிநீரை பருகி வந்ததே காரணம் என தெரிய வந்திருக்கிறது.
இச்சம்பவம் குறித்து ஜே.கே லான் மருத்துவமனை மருத்துவர் அசோக் குப்தா கூறுகையில், மறுவாழ்வு முகாமில் இருந்து வந்து அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற ஒரே மாதிரியான நோய்கள் தாக்கப்பட்டிருப்பதாகவும், குழந்தைகளுக்குச் சில வகையான தொற்றுகள் ஏற்பட்டிருக்கிறது.  மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குக் குறைந்தளவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது எனவும்  கூறினார்.
ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜ் சிந்தியா, இச்சம்பவம் குறித்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் அவர ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பின்னர் 2 துணை இயக்குனர்கள், ஒரு கடலோரக் கண்காணிப்பாளர், ஒரு பொறுப்பாளர், 2 மருத்துவர் ஆகியோரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம், இச்சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: