புதுதில்லி, ஏப்ரல் 27-
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார். இவர் ‘பிகாரிலிருந்து திகாருக்கு’ என்ற தலைப்பில் புதிய புத்தகம் ஒன்றை எழுதவிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் தனது பள்ளி நாட்கள், மாணவர் அரசியலுடன் தனக்கு ஏற்பட்ட ஆழமான பிணைப்பு, தனது சர்ச்சைக்குரிய கைது அதன் உள்விவரங்கள் ஆகியவற்றை எழுதவிருக்கிறார் கண்ணய்யா குமார்.

தன்னுடைய இந்தப் புத்தகம் குறித்து கண்ணய்யா குமார் கூறும்போது, “தனிமனிதர்களைக் கொல்வது எளிது, ஆனால் கருத்துகளை கொல்ல முடியாது என்று பகத் சிங் கூறினார். எங்களுடைய இந்தப் போராட்டம் எங்கு எங்களை இட்டுச் செல்லும் என்று தெரியவில்லை. ஆனால் எங்கள் கருத்துகள் வரலாற்றில் இடம்பெற புத்தகமாக வெளிவருவது அவசியம்.இந்தியச் சமூகத்தில் நிலவிவரும் உள்ளார்ந்த முரண்பாடுகளைப் பற்றியும் எழுத விரும்புகிறேன். இதன் மூலம் இந்திய இளம் சமுதாயத்தினரின் நம்பிக்கைகள், சோகங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்த விரும்புகிறேன்” என்றார். இந்தப் புத்தகத்தை ஜக்கர்நாட் பப்ளிகேஷன் வெளியிடுகிறது.

பிகார் மாநிலத்தின் பெஹுசராய் மாவட்டத்தில் பரவ்னி அருகே பிஹாத் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணய்யா குமார். இவரது தந்தை ஜெயசங்கர் சிங், தாயார் மீனாதேவி. இவருக்கு அண்ணன் உள்ளார். பீகார் பரவுனியில் உள்ள ஆர்கேசி உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு படித்தார். பாட்னா நாலந்தா திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் தனது பட்ட மேல்படிப்பை முடித்து விட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். தற்போது அவர் ஆப்பிரிக்க ஆய்வுகள் பிரிவில் பி.எச்டி படிப்பினை தொடர்ந்து வருகிறார்.

Leave A Reply

%d bloggers like this: