கரூரில் அதிமுக பிரமுகரும் தொழிலதிபருமான அன்புநாதன் வீட்டில் ரூ. 500 கோடி பதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரூ. 500 கோடியை பிரித்து பல தொகுதிகளுக்கு அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது. பணம் பறிமுதல் செய்யப்பட்டதைவிடவும், அதை மறைப்பதற்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் சிலர் செய்யும் தில்லுமுல்லுகளால் அதிர்ந்து போய் இருக்கிறார்கள் அரவக்குறிச்சி தொகுதிவாசிகள். ரெய்டு நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை அழித்துவிட்டதாகவும் பேசப்படுகிறது. கரூரில் அன்புநாதன் வீட்டில் நடந்த ரெய்டில் ரூ.4கோடியே 80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்துடன் ரூ. 2 கோடி மதிப்புள்ள பட்டு வேட்டி, புடவை, சட்டை பதுக்கப்பட்டுள்ளது. 2 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் அன்புநாதன் வீட்டில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அய்யம்பாளையத்தில் அன்புநாதனுக்குச் சொந்தமான குடோனில் இருந்து சுற்றுவட்டார ஊர்களுக்கு பணம் கடத்தப்பட்டு அங்கங்கே பதுக்கி வைக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக, அன்புநாதன் குடோன் உள்ள ஏரியாக்களில் தினமும் சில மணிநேரம் கரண்ட் கட் ஆகியிருக்கிறது. அந்த நேரத்தில், இது மத்திய அரசுக்கு சொந்தமானது என்கிற ஸ்டிக்கருடன் ஆம்புலன்ஸ் வேன்கள் சைரன் ஒலியுடன் சென்றிருக்கின்றன.
கடந்த 15 நாட்களாகவே குடோனுக்குள் ஆம்புலன்ஸ் வந்து போய்க் கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் சைரனை ஒலிக்கவிட்டு பணத்தைக் கடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி யாரோ தகவல் கொடுக்கவே வியாழக்கிழமையன்று மாலையில் கரூர் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே தலைமையிலான அதிகாரிகள் சோதனைக்குக் கிளம்பினர். தொடர்ந்து இரண்டு நாட்களாக தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. தேர்தல் செலவு கணக்குப் பார்வையாளர் ஆசிஷ், வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன், டி.ஆர்.ஓ அருணா ஆகியோரும் விசாரணையில் இறங்கியுள்ளனர். குடோனில் சோதனை நடந்த அன்றே, கரூர் பைபாஸ் சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த ஆம்புலன்ஸ் பற்றி எந்தத் தகவலையும் அதிகாரிகள் வெளியில் சொல்லவில்லை. கடந்த தேர்தலின்போதும் ஆம்புலன்ஸ் மூலம்தான் பணத்தைப் பட்டுவாடா செய்தனர். இந்தத் தேர்தலிலும் இதேமுறையைக் கையாள்கின்றனர். இதுவரையில், குடோனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகையின் மதிப்பு ரூ.100 கோடியைத் தாண்டும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சில லட்சங்கள்தான் என்ற தகவலை வெளியிடுகின்றனர் அதிகாரிகள். இதுதவிர, ஏராளமான சொத்துப் பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிகப் பணம் புழங்கும் இடமாக அரவக்குறிச்சி உள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியின் உறவினர்தான் அன்புநாதன். செந்தில்பாலாஜி அரவக்குறிச்சியில்தான் போட்டியிடுகிறார். ஆம்புலன்ஸ் மூலமே தொகுதியின் முக்கிய இடங்களுக்குப் பணத்தை பட்டுவாடா செய்து வந்தனர். இதைப் பற்றி நன்றாகத் தகவல் தெரிந்த அதிமுக பிரமுகர் ஒருவர்தான் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு போனதாக கூறப்படுகிறது. அன்புநாதன் குடோனின் அதிகாரிகள் நடத்திய சோதனையில், 12 பணம் எண்ணும் இயந்திரங்கள், பணத்தைக் கட்டும் ரப்பர் பேண்டுகள், சரக்கு அடைக்கப்படும் காலி பெட்டிகள், நான்கு கார்கள், ஒரு டிராக்டர், ஒரு ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆனால், பிடிபட்டது வெறும் 10.3 லட்ச ரூபாய்தான் என தேர்தல் அதிகாரிகள் சொல்கின்றனர். “பத்து லட்ச ரூபாய்க்காக மூன்று நாட்கள் ஏன் விசாரணை நடத்த வேண்டும்?” எனவும் தொகுதிவாசிகள் கேள்வி எழுப்புகிறார்கள் இதனிடையே பணம் பதுக்கிய இடத்தில் சி.சி.டி.வி கேமிரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது. பணம் பிரித்து அனுப்பப்படும் காட்சிகள் அனைத்தும் கேமிராவில் பதிவாகி உள்ளதாக தெரிகிறது. சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை அழிக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் உத்தரவால் கரூரில் உள்ள அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். அமைச்சர்கள் இருவர் அன்புநாதன் வீட்டுக்கு வந்து சென்றது கேமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் கொண்டு செல்லப்பட வேண்டிய இடத்தை பற்றியும் அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர். மூத்த அமைச்சர்கள் இருவரும் அன்புநாதனுடன் உரையாடும் காட்சிகள் கேமிராவில் உள்ளன.
கேமிரா காட்சிகள் வெளியானால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி உருவாகலாம் என்று கூறப்படுகிறது.(தட்ஸ் தமிழ் இணைய இதழில்வெளியான செய்தி)

Leave a Reply

You must be logged in to post a comment.