புதுதில்லி, ஏப்ரல் 21-
செல்போன்களில் உள்ள காணொளி காட்சிகளைத் தொலைக்காட்சியின் அகன்ற திரையில் காண உதவும் கையடக்கருவியான கூகுள் குரோம்காஸ்ட் 2 மற்றும் குரோம்காஸ்ட் ஆடியோ சாதனங்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது கூகிள் நிறுவனம்.

ஏற்கனவே குரோம்காஸ்ட் 1 என்கிற கருவியைக் கடந்த 2013ம் ஆண்டு ஜீலை 24ம் தேதி அமெரிக்காவில் $35 டாலர் விலையில் அறிமுகப்படுத்தியது. இதிலுள்ள குறைகளைக் களைந்து குரோம்காஸ்ட் 2 மற்றும் குரோம்காஸ்ட் ஆடியோ ஆகிய இரண்டு கருவிகளைக் கடந்த ஆண்டு செப்டம்பரில் உலகச் சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் புதனன்று இக்கருவிகளைப் பவளம், கருப்பு மற்றும் எலுமிச்சை நிறங்களில் அதிகாரப்பூர்வமாகச் சந்தைப்படுத்தியது. இந்தக் கருவிகளுக்கான விலையாகத் தலா ரூ.. 3,339 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கையடக்கக் கருவிகளை நேரடியாகத் தொலைக்காட்சி மற்றும் ஆடியோ சாதனங்களில் இணைக்கலாம். கூகுள் குரோம்காஸ்ட் கருவியை எச்டிஎம்ஐ போர்ட்டில் இணைத்து மைக்ரோ யூஎஸ்பி போர்ட் வழியாக மின்னிணைப்பு கொடுக்கவேண்டும்.
இதற்கான மென்பொருளைக் கூகுள் இணையம் வழியாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். செல்போன் மற்றும் தொலைக்காட்சியை வை-பை மூலமாக இணைக்கும் தொடர்பு கருவியாக இது செயலாற்றுகிறது.

இணையத்திலுள்ள யூடியூப், ஆன்லைன் வீடியோ காட்சிகளை கண்டுகளிக்கலாம். அகன்ற திரையில் பல்வேறு வகையான விளையாட்டுகளை கையாளலாம். மேலும் கூகுள் குரோம்காஸ்ட் ஆடியோ சாதனத்தை 3.5எம்எம், ஆர்சிஏ மற்றும் ஆப்டிகல் போர்ட் வழியாக இணைத்து இசையினை மிக துல்லியமான கேட்கலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.