சாக்குக்குள் இருப்பது பூனையல்ல… யானை
இந்து நாளிதழில் (15.04.16) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியரும், ‘வரிச் சொர்க்கங்கள்’ என்று அழைக்கப்படும் கறுப்புப் பணம் அடைக்கலம் புகுகிற நாடுகளில் ஆய்வு செய்த குழுவின் உறுப்பினருமான அருண்குமார் ‘பனாமா பதுக்கல் பணம்’ சர்ச்சை பற்றி எழுதியுள்ள கட்டுரை தரும் தகவல்கள் இவை..இந்திய நாட்டில் அந்நிய முதலீடாக உள்ளே வருகிற தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (G.D.P) 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதத்திற்குள் இருக்கிறது. ஆனால், இந்தியாவை விட்டு பறக்கிற முதலீடுகள் (FLIGHT OF CAPITAL) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாக உள்ளது. இதற்கு காரணம் நிதிச் சொத்துகளின் வரவிலும், வெளியேற்றத்திலும் உலகமயம் கதவுகளைத் திறந்து விட்டது தான். இன்னொரு மிகப்பெரிய காரணம், ‘வரிச்சொர்க்கங்கள்’ என உலகம் முழுவதும் மொரீசியஸ், பனாமா போன்று வரி ஏய்ப்புக்கு வழி செய்கிற பொருளாதார ஏற்பாடுகள்.இப்படி அந்நிய மண்ணில் போய்ப் பணம் பதுக்குவதற்கும் உலகமயப் பொருளாதாரப் பாதைக்கும் தொடர்பு உள்ளது. 1998 வரை அமலில் இருந்து அந்நியச் செலாவணி கட்டுப்பாடு சட்டம் (FERA) ஒப்பீட்டளவில் கடுமையானது. சட்டத்திற்கு விரோதமாக அந்நிய நாட்டிற்குப் பணத்தை கொண்டு செல்வது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டது. 1999 ல் அந்நியச் செலாவணி நிர்வகிப்புச் சட்டம் (FEMA), 2005 ல் கொண்டு வரப்பட்ட பண மோசடித் தடுப்புச் சட்டம்(prevention of money laundering act) ஆகியன கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டவை சிவில் குற்றமாக மாறி விட்டன. 2003 ல் தாராள பணப் போக்குவரத்து திட்டம் (Liberationed Remittance scheme) அறிமுகம் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புகிற விதிமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதிலிருந்தே வெளிநாடுகளுக்குப் போகிற பணம் முறையானவையா, முறைகேடானவையா என்ற சர்ச்சை துவங்கி விட்டது.அரசாங்கமே ‘ மொரீஷியஸ் வழியை’ “ பங்கேற்பு பத்திரங்களை” (PARTICIPATORY NOTES) அனுமதித்ததால் கணக்கில் வராத பணத்தைத் துரத்துகிற தார்மீக அதிகாரம் மங்க ஆரம்பித்து விட்டது. சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது சிக்கலுக்கு ஆளாகின. பொதுமக்களுக்கும் எது முறையானது, எது முறையற்றது என்ற குழப்பம் ஏற்பட்டது. பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பதிவு செய்யாமலேயே அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாமென்ற நடைமுறை உள்ளே வருகிற பணத்தின் மூலத்தை மட்டுமின்றி வெளியே செல்கிற பணத்திற்கான மூலத்தையும் குறைத்து விட்டது.பனாமாவின் சட்ட நிறுவனம் மொசாக் ஃபொன்சேகா விலிருந்து ‘திருடப்பட்டதாக’ சொல்லப்படும் ஆவணங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 11 லட்சம். அதில் இந்தியா சம்பந்தப்பட்டவை 36000 மட்டுமே. மொத்தத்தில் 0.33 சதவீதமே. எனினும், மொசாக் ஃபொன்சேகா நிறுவனம் மற்ற வரிச் சொர்க்கங்களோடும் (பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், பகாமாஸ் போன்றவை) தொடர்புகளைக் கொண்டதாய் இருந்துள்ளது. அங்கெல்லாம் கூட முகத்தை மறைத்துப் பணத்தைப் பாதுகாக்க தனது வாடிக்கையாளர்களுக்கு உதவிகளைச் செய்துள்ளது. எனவே, ஒரு கோடியே 11 லட்சம் ஆவணங்களை ஸ்கேன் செய்து பரிசீலித்தால், 1,50,000 நிறுவனங்களின் முகங்கள் தெரிய வரலாம். அவற்றில் பல பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங்களாக இல்லாவிட்டாலும் அந்நடவடிக்கைகளின் பயனாளிகளாக இந்தியர்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.பனாமா அரசையும், மொசாக் ஃபொன்சேகா நிறுவனத்தையும் நெருக்கி கூடுதல் தகவல்கள் பகிர்ந்து கொள்வது உறுதி செய்யப்பட வேண்டும். பனாமாவுக்கு இக்காலத்தில் பயணம் செய்தவர்கள், மொசாக் ஃபொன்சேகா நிறுவனத்தைச் சந்தித்தவர்கள் விசாரிப்பிற்கு உள்ளாக்கப்பட வேண்டும். இப்படித்தான் 2007 ல் யு.பி.எஸ் வங்கியில் (U.B.S BANK) முறைகேடுகள் நடைபெற்ற போது குற்றவாளியான பிரட்லி பிர்கன்பெல்டு பிடிபட்டார்.‘பனாமா பதுக்கல்’ என்பது சாக்கை விட்டு வெளியே ஓடுகிற பூனை அல்ல. அதை விட மிகப் பெரிய பிரச்சனை, அரசின் கொள்கைகளே. அதன் விளைவே விஸ்வரூபமெடுத்து அந்நிய முதலீட்டின் வருகையைக் காட்டிலும், வெளியே பறக்கிற பணம் மிக அதிகமாக உள்ளது. 1948 லிருந்து 2012 க்குள்ளாக முறைகேடாக வெளியேறிய முதலீடுகளின் காரணமாக இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட இழப்பு இரண்டு டிரில்லியன் டாலர்களாக இருக்கலாம். அதில் ஒரு பகுதி விதிமுறைகளால் தளர்வால் திரும்பி வந்திருக்கலாம். அப்படித் திரும்பிய முதலீடுகளையும் சேர்த்து தான் ‘அந்நிய முதலீட்டு வருகை’ கணக்கிடப்பட்டுள்ளது.இதில் வேடிக்கை என்னவெனில், 1997 லிலும், 2007 லிலும், எஸ்.எஸ்.தாராப்பூர் தலைமையிலான குழு மூலதனக் கணக்கு முழு மாற்றத்திற்கு (FULL CAPITAL ACCOUNT CONVERTIBILITY) பரிந்துரைகளை அளித்தது. இதன் பொருள் இப்போது நடப்புக் கணக்குகளில் மட்டும் நிதி வரத்து, போக்குகளுக்கு தளர்வு தரப்பட்டுள்ளது. ஆனால் மூலதனக் கணக்கிலுமான வரத்து, போக்குகளுக்குக் கட்டுப்பாடு வேண்டாமென்பது அப்பரிந்துரை. ஆனால், தென் கிழக்கு ஆசிய நாடுகளின் நெருக்கடியால் 1997 லிலும், உலகப் பொருளாதார நெருக்கடியால் 2008 லும் அப்பரிந்துரைகள் அமலாகவில்லை. அவர்களின் சோகம் நமக்கு பாடம்.ஆனால் பனாமா ரகசியம் அவிழுமா? கட்டுரையாளர் சொல்கிறார். ‘அது நடக்காது’ –- ஏனெனில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இவ்விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்கள். ஐஸ்லாந்தில் பிரதமரின் குடும்பத்தினர் பெயர்கள் பனாமா சர்ச்சையில் அடிபட்டதையொட்டி பதவி விலகினார். அப்படியெல்லாம் இந்தியாவில் நடக்காது. காரணம் பிரச்சனை அயல்நாட்டில் இல்லை. இந்தியாவிற்குள் தான் உள்ளது..
கடன் கட்டாதவர் பட்டியல் இல்லையாம்!
‘இந்து பிசினஸ் லைன்’ – – தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பிக் கட்டாதவர்களின் பட்டியலை( WILFUL DEFAULTERS)ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தது. ரிசர்வ் வங்கியின் பதில், “ எங்களிடம் இப்பட்டியல் இல்லை. அப்பட்டியலைத் தொகுப்பது ஓர் பொது நிறுவனத்தின் வருமானத்தைத் திருப்பி விடுவதாகும்” என்பதே. ரிசர்வ் வங்கி துணை கவர்னரோ, கடன் கட்டாத பெரிய நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டால் மொத்த கடன் முறைமையே செயலிழந்து நின்றுவிடும் என்று கூறியுள்ளார். விஜய் மல்லையா ஓடியது ‘நியாயம் தான்’ என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை..

Leave A Reply

%d bloggers like this: