திண்டுக்கல். ஏப்.15
திண்டுக்கல் மாவட்ட கருவூலத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் நான்கு அரசு ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல், மேட்டுப்பட்டியில் மாவட்ட கருவூலம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முதல்தள மேற்கூரை வெள்ளியன்று இடிந்து விழுந்தது. இதில் முதல்தளத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த அரசு ஊழியர்கள் வேடசந்தூரைச் சேர்ந்த கார்த்திக், பழநியைச்சேர்ந்த் மூர்த்தி, நிலக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா, திண்டுக்கல்லைச் சேர்ந்த மோகன் ஆகிய நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்
மாவட்ட கருவூலம் 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. உரிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததால் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்திலேயே ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது மேற்கூரை இடிந்துவிழுந்ததில் நான்கு ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர். மாவட்ட கருவூல அலுவலகத்தை உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு மாற்றவேண்டுமென ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: