சென்னை, ஏப். 14-
அம்பேத்கரின் 125வது பிறந்த நாளன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெளிச்சம் தொலைக்காட்சியின் துவக்க விழா சென்னையில் வியாழனன்று (ஏப். 14) நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். விடுதலை சிறுத்தைகளின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளங்களை தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, த.மா.க ஒருங்கிணைப்பாளர் வைகோ துவக்கி வைத்தார். “ஆணிவேர்” தேர்தல் பிரச்சார குறுந்தகட்டை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட விஜயகாந்த் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவிற்கு தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார். விசிக ஊடக மைய முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு வரவேற்றார். பொதுச் செயலாளர்கள் சிந்தனைச் செல்வன், ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசூப், குணா, வன்னி அரசு கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த 50 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்து ஊழல் கறை படிந்த திமுக, அதிமுகவை தோற்கடிக்க வேண்டும். விரோதியை மக்கள் மன்னிப்பார்கள். துரோகியை ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். விளிம்பு நிலை மக்களுக்காவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் வெளிச்சம் தொலைக்காட்சி செயல்படும் என்றார்.
கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, நமது அணிக்கு கேப்டன், வெளிச்சம் என 2 தொலைக்காட்சிகள் உள்ளன. ஆனாலும் அதிமுக, திமுக, பாமக ஆகிய 3 கட்சிகளும் ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு தொலைக்காட்சி நடத்துவதோடு தேர்தலையும் சந்திக்க உள்ளார்கள். அவர்களது கனவை 6 கட்சி தலைவர்களின் கூட்டு முயற்சியால் தொண்டர்களின் ஒருங்கிணைப்பால் முறியடிக்கப்படும் என்றார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐயா மூப்பனார் கண்ட கனவு இந்த கூட்டணியின் மூலம் நிறைவேறப் போகிறது. இதனால் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். நமது கூட்டணி ஒரு கூட்டுக் குடும்பம் கூட்டணி ஆட்சிக் குடும்பம். நமது கூட்டணித் தலைவர்கள் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள். எளிமை, நேர்மை, வெளிப்படையான நிர்வாகத்தை அளிப்பார்கள். இந்த அணிக்கு கடந்த 4 நாட்களில் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கடந்த காலங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆளும், ஆண்ட கட்சிகள் மட்டுமே தொலைக்காட்சியை துவக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதற்கு மாற்றாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாம் விசிக சார்பில் துவங்கப்படும் வெளிச்சம் தொலைக்காட்சி ஏழை எளிய மக்களின் அவல நிலையை வெளிக் கொண்டுவர மகத்தான சேவை புரியும். இந்த தேர்தலில் நமது அணிக்கு பக்கபலமாக தீக்கதிர், ஜனசத்தி நாளேடுகளும், கேப்டன் தொலைக்காட்சியும், வெளிச்சம் தொலைக்காட்சியும் இருக்கும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், சாதி வெறி பிடித்த பாமக, மதவெறி சக்தியான பாஜக இரண்டையும் இந்தத் தேர்தலில் தனிமைப்படுத்தியதே இந்த கூட்டணியின் முதல் வெற்றியாகும். அதேபோல் ஆட்சியில் இருப்பவரை வீட்டிற்கு அனுப்புவதும், மீண்டும் ஆட்சியை பிடிக்க துடிக்கும் திமுகவை துடைத்தெறிவதும் இந்தக் கூட்டணியின் அடுத்த வெற்றியாகும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக இளைஞர் அணி தலைவர் எல்.கே,சுதிஷ், மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர்கள் அ.சவுந்திரராசன், கே.பாலகிருஷ்ணன், மதிமுக திருப்பூர் துரைசாமி, கணேசமூர்த்தி, மல்லை சத்யா, தமாக ஞானதேசிகன், கோவை தங்கம், மகேஸ்வரி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.