ஜம்மு, ஏப்.13-
காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாரா நகரில் பள்ளியில் இருந்து செவ்வாயன்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவிக்கு பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு பெண் புதனன்று உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரின் ஹண்ட்வாரா, குப்வாரா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக வில்லை என்று கூறும் வீடியோ ஒன்றையும் ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த போது எடுக்கப்பட்டதால் அதில் உண்மை இல்லை என்று பல அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஹண்ட்வாரா சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.