rmd-fishermen

இராமநாதபுரம், ஏப். 12-
சவூதி அரேபியாவில் கொத்தடிமைகளாக அடைக்கப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 46 மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி,மோர்பண்ணை, முள்ளிமுனை, காரங்காடு, தொண்டி, புதுக்குடி வாலிநோக்கம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து சவூதி அரேபியாவில் சுபைல் என்ற பகுதிக்கு ஒப்பந்த அடிப்படையில் 46 மீனவர்கள் ஆறு வருடங்களுக்கு முன் சென்றுள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அவர்கள் குடும்பச் செலவிற்கு பணம் அனுப்பி வந்துள்ளனர். ஆனால், திடீரென பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டனர். இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அதற்கு மீனவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்காமல் அடைத்து வைத்திருப்பதைத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சவூதி அரேபியாவில் கொத்தடிமைகளாக அடைக்கப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 46 மீனவர்கள் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள், கடலூரைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள், தஞ்சாவூரைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் என மொத்தம் 62 மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து இராமநாதபுரம் அரண்மனை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் வி.காசிநாததுரை, ஆர்.குருவேல், கண்ணகி, ஊராட்சித் தலைவர்கள் முன்னிமுனை ரவி, காரங்காடு அந்தோணிகிளாரட், திருப்பாலைக்குடி கிராமத் தலைவர் ஹரிதாஸ், மோர்ப்பண்ணை மக்கார்ட்டுதுரை, ரேவதி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்

Leave A Reply

%d bloggers like this: