அரிசி, கோதுமை, சோளம், பார்லி, மக்காச் சோளம் போன்ற உணவுப் பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு விலங்குகள் அல்லது பறவைகளின் உதவி தேவையில்லை. ஆனால் சில பருப்பு வகைகள், சூர்யகாந்தி விதைகள், ஏலம், காபி, முந்திரி, ஆரஞ்சு, மா, ஆப்பிள் போன்ற பயிர்களின் மகரந்தச் சேர்க்கையில் பறவைகள், வெளவால்கள், பூச்சிகள் உள்ளிட்ட 20,000 வகைப்பட்ட உயிரினங்கள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. இப்படி உலகம் முழுதும் உருவாகி வளரும் பயிர்களின் பொருளாதார மதிப்பு 235 பில்லியனிலிருந்து 577 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என 2015ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்டது. பெரும்பாலான உணவுப் பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு ஆயிரக்கணக்கான வகை தேனீக்கள் உதவுகின்றன.
மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதால் உணவு உற்பத்தி குறையும் ஆபத்து இருப்பதாக ஒரு சமீபத்திய ஐ.நா. அறிக்கை எச்சரிக்கிறது. இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள 75 நாட்டு விஞ்ஞானிகளின் சர்வதேசக்குழு உலக அளவில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உயிரினப்பன்மை மற்றும் சூழல் அமைப்பு சேவைகளின் நாடுகளுக்கிடையான மேடை (ஐவேநசபடிஎநசஅநவேயட ஞடயவகடிசஅ டிn க்ஷiடினiஎநசளவைல யனே நுஉடிளலளவநஅள ளுநசஎiஉநள – ஐபிபிஈஎஸ்) இவ்வளவு பெரிய விஞ்ஞானிகள் குழுவை ஒன்றுசேர்த்து ஒருங்கிணைத்தது. 124 நாடுகளால் ஏற்கப்பட்டுள்ள மேற்கண்ட ஐ.நா. அறிக்கை கோலாலம்பூரில் சென்ற மாதம் வெளியிடப்பட்டது.
சூழல் அமைப்பு சேவைகளை ஐபிபிஈஎஸ் எவ்வாறு வரையறுக்கிறது? இயற்கை சமூகத்திற்கு அளிக்கும் நன்னீர், வளமான மண் ; உணவுப் பொருட்களையும் மருத்துவ குணமுள்ள பொருட்களையும் தரும் பயிர்கள்; மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களைப் பாதுகாப்பது; பயிர்களை நோய்கள் தாக்காமல் பார்த்துக்கொள்வது; காற்று மண்டலத்திலிருந்து கரியமிலவாயுவை ஈர்த்து சேமிப்பது போன்ற பல அம்சங்கள் இந்த சேவைகளில் அடங்கும். ஐபிசிசி (ஐவேநசபடிஎநசஅநவேயட ஞயநேட டிn ஊடiஅயவந ஊhயபேந) என்ற பருவநிலை மாற்றங்களுக்கான சர்வதேசக் குழுவை மாடலாகக் கொண்டு ஐபிபிஈஎஸ் அமைக்கப்பட்டது. உலக அளவில் பருவநிலை மாற்றங்கள் தொடர்பான கொள்கைகளை வகுக்க ஐபிசிசி உதவுவது போல மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களைப் பாதுகாப்பது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்க ஐபிபிஈஎஸ் உதவ இருக்கிறது. ஐபிபிஈஎஸ் அறிக்கையின்படி, மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்துவருவது பற்றிய தகவல்கள் வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நன்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் உலகின் பிற பகுதிகளில் அந்த ஆய்வுப் பணி சரிவர நடைபெறவில்லை. இந்தியாவில் உணவுப் பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் அனைத்துவகை தேனீக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.
இமாலயப் பகுதிகளில் ஆப்பிள் பழங்களின் உற்பத்தி வீழ்ச்சியடைந்திருக்கிறது. மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது உயிரினப்பன்மைக்கு மட்டுமல்ல, வேளாண் பொருளாதாரத்திற்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. ஆனால் இது பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் நம் நாட்டில் குறைவாகவே உள்ளது. மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களைப் பாதுகாக்க, மகரந்தச்சேர்க்கை பற்றிய அறிவியலையும் நிலவியல் மேலாண்மையையும் மேம்படுத்துவது, பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதில் கறாரான கட்டுப்பாடுகள், மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களின் வாழ்விடங்களை மீட்டு பாதுகாப்பது போன்ற பல பரிந்துரைகளை ஐபிபிஈஎஸ் அளித்திருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக மகரந்தச் சேர்க்கை உயிரினங்களின் எண்ணிக்கை குறையாமல் பாதுகாத்து இயற்கை வளங்களைப் பலப்படுத்த வேண்டிய உடனடித் தேவை எழுந்திருக்கிறது. இயற்கையில் அமைந்த நிலப்பகுதிகள், விவசாய நிலங்கள், நகர்ப்புற நிலங்கள் எல்லாவற்றையும் நிர்வகிப்பதும் இதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததே. ஓர் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் மூலமே உணவுப் பற்றாக்குறை ஏற்படும் பேராபத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

(உதவிய கட்டுரை : மார்ச் 30 தி ஹிண்டு நாளிதழில் கமல் பாவா எழுதிய கட்டுரை).

Leave a Reply

You must be logged in to post a comment.