வருமா பணம்…

கிராமப்புற உழைப்பாளிகள் தாங்கள் பார்த்த வேலைக்கு கூலி வாங்குவதற்கே உச்சநீதிமன்றத்தின் படியேற வேண்டியிருக்கிறது.2015-16ல் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடந்தேறிய வேலைகளுக்கு கூலி பாக்கி ரூ.7,983 கோடிகள். இதில் 10 வறட்சி மாநிலங்களில் தரவேண்டிய பாக்கியான ரூ.2,723 கோடிகளும் அடங்கும். வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பது 150 நாட்களாக உயர்த்தப்படுமென்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி மாதத்திலேயே பல மாநிலங்களில் திட்டத்திற்கான நிதி காலியாகிவிட்டது.

இப்போதுதான் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இத்திட்டத்திற்கான பணத்தை தவணைகளில் தருவதாக வாக்குமூலத்தை தாக்கல் செய்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ரூ.11,030 கோடிகளைத் தருவதாக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த தவணை ஜூன் மாதத்திலும், அதற்கடுத்து அக்டோபரிலும் நிதி உத்தரவாதப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அரசின் கணக்குப்படியே இத்திட்டத்தின் சராசரி வேலை நாட்கள் 2015-16ல் 48 மட்டுமே எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு கூலி பெறுவதற்கே இவ்வளவு அல்லாட வேண்டியுள்ளது.இத்திட்டத்தில் செலவான தொகைகளும் விவசாயத் தொழிலாளர்களுக்குப் போய்ச் சேர்ந்ததா என்பது தனிக்கதை. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் ஜே.சி.பி மூலம் வேலைகளை முடித்துவிட்டு வேலை நாளுக்கு ரூ.30 மட்டும் கூலி தந்துவிட்டு ரூ.100 கணக்கு எழுதுவது நடந்தேறுவதாக ‘இந்து’ செய்தி ஒன்று கூறுகிறது.

எட்டுமா கல்வி?

அடுத்த கல்வியாண்டில் இருந்து ஐ.ஐ.டிகளில் கல்விக் கட்டணம் ரூ.2 லட்சத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. 8 லட்சம் ரூபாய் கையில் இருப்பவர்கள்தான் ஐ.ஐ.டிக்குள் காலடி வைக்க முடியுமென்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பெற்றோர், மாணவர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.கட்டணம் அதிகமாக இருந்தால் மட்டுமே தரத்தை உயர்த்த முடியுமென்ற கருத்து உலவ விடப்படுகிறது. நமது உயர் கல்வி நிறுவனங்களின் தரமும் உயர்வதற்கு இது தேவை என்றெல்லாம் கூட பேசப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இலவசக் கல்விதான் நடைமுறையில் உள்ளது. எனவே தரம் உயருமென்பதெல்லாம் ஏற்க இயலாத வாதம். 8 லட்சம் ரூபாயை வங்கிக்கடன் மூலம் சமாளித்தாலும் அதற்குப் பிறகு முதுநிலைப்பட்ட, கல்வியை எப்படி ஏழை, எளிய மாணவர்கள் தொட முடியும்? மேலும் விடுதிக்கட்டணம், புத்தகங்களுக்கான செலவினம் இவற்றுக்கெல்லாம் எங்கே போவார்கள்?2008ல் ரூ.25,000லிருந்து ரூ.50,000 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டது. 2013ல் ரூ.50,000 லிருந்து ரூ.90,000 ஆக உயர்ந்தது. 2016ல் இரண்டு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.நரேந்திர மோடியின் ‘நல்ல காலம் காத்திருக்கிறது’ என்ற தேர்தல் முழக்கத்தின் அர்த்தம் இப்போதுதான் பலருக்குப் புரிந்துள்ளது.

எப்படி வசூலாகும்?

விஜய் மல்லையாவுடன் பேசித் தீர்க்கலாமென பொதுத்துறை வங்கிகள் கருத்துத் தெரிவித்துள்ளன. ரூ.9000 கோடி பாக்கி வைத்திருக்கும் அவர் ரூ.4000 கோடியை செப்டம்பரில் கட்டுவதற்குத் தயாராக இருப்பதாக விஜய் மல்லையாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மல்லையாவின் முன்மொழிவை முதலில் நிராகரித்த வங்கிகள் பின்னர் இறங்கி வந்துள்ளன.உச்சநீதிமன்றம் கூட இரண்டு கேள்விகளையே எழுப்ப முடிந்துள்ளது. ஒன்று, எவ்வளவு சொத்துக்கள் 31.03.2016 அன்று மல்லையாவின் பெயரில், மனைவி பெயரில், குழந்தைகள் பெயரில் உள்ளன? என்பது. இரண்டாவது, விஜய் மல்லையா இந்த உறுதிமொழியை நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகித் தருவாரா? என்பது. கடனைக் கட்டாமல் வெளிநாட்டுக்கு கம்பி நீட்டிய விஜய் மல்லையாவிடம் இருந்து பணத்தை வசூலிப்பதற்கு வங்கிகள் எவ்வளவு இறங்கி வரவேண்டியுள்ளது பாருங்கள்!இச்செய்தி வந்துள்ள அதே நாளில் வெளியாகியுள்ள இன்னொரு செய்தி வங்கித்துறையின் எதிர்காலம் பற்றிய ஆழமான கேள்வியை எழுப்பியுள்ளது. கிரிமினல் குற்றங்களில் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது 4 மாதங்களுக்குள்ளாக விசாரணையைத் துவங்க வேண்டுமென்ற உச்சநீதிமன்ற வழிகாட்டல்களை ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், கார்ப்பரேசன் பாங்க், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, பேங்க் ஆப் இந்தியா, எக்சிம் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மீறியுள்ளன என மத்தியக் கண்காணிப்பு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. இப்படி நிலைமை நீடித்தால் நிறைய மல்லையாக்கள் உருவாக மாட்டார்களா?

க.சுவாமிநாதன்

Leave A Reply

%d bloggers like this: