ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க விஜய் மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுதில்லி, ஏப். 7 –
‘சாராய அதிபர்’ விஜய் மல்லையா, நடப்பாண்டு வரையிலான அவரது உள்நாட்டு, வெளிநாட்டு சொத்து விவரங்களை, ஏப்ரல் 21-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விஜய் மல்லையாவின் இந்த சொத்து விவர வாக்குமூலங்கள் தாக்கலான பின், அதுகுறித்த தங்களது கருத்தை, ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு வங்கிகளுக்கும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.‘கிங் பிஷர்’ சாராய ஆலை அதிபரான விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் பெற்று,அதைத் திருப்பிச் செலுத்தவில்லை.
கறாரான நடவடிக்கை மூலம் அவரிடம் கடன் தொகையை வங்கிகள் வசூலிக்க முயன்ற நிலையில், மல்லையா இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடினார். தற்போது மல்லையா லண்டன் நகரில் இருக்கிறார்.இவ்விவகாரம் தொடர்பாக வங்கிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து உச்சநீதிமன்றத்தை முறையிட்ட நிலையில், மல்லையா இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், கடந்த மார்ச் 30-ஆம் தேதி மல்லையா சார்பில் அவரது நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் அளித்த வங்கிகளுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க விஜய்மல்லையா முன்வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, மல்லையாவின் அறிக்கையை ஏற்று உடன்பாட்டுக்கு வருவது தொடர்பாக, ஒரு வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் வங்கிகளை அறிவுறுத்தியது. இந்நிலையில், வியாழனன்று இவ்வழக்கு நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹிண்டன் நாரிமன் ஆகியோரைக் கொண்ட அமர்வின் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கிகள் தரப்பில் ஆஜரான ஷியாம்திவான், ராபின் ரத்னாகர் டேவிட் ஆகிய வழக்கறிஞர்கள், முதற்கட்டமாக செப்டம்பர் மாதம் ரூ. 4 ஆயிரம் கோடியை திருப்பியளிப்பதாக கூறிய விஜய் மல்லையாவின் கூற்றை வங்கிகள் கூட்டமைப்பு நிராகரிப்பதாக தெரிவித்தனர்.“மிகப்பெரிய தொகை சம்பந்தப்பட்ட இவ்வழக்கில், விஜய் மல்லையாவை அவரது முழுமையான சொத்து விவரங்களை வெளியிடச் செய்வதுதான் சரியாக இருக்கும்; ஏனென்றால் அவர் சொன்னபடி இந்தத் தொகைகளை அளிப்பாரா? என்ற சந்தேகங்கள் உள்ளன; எனவே முதலில் அவர் தனது நம்பகத்தன்மையை நிரூபிக்கும் வகையில், சொத்து விவரங்களை அளிப்பதும், பெரியதொகை ஒன்றை டெபாசிட்டாகச் செலுத்துவதும்தான், இவ்வழக்கில் தீர்வை நோக்கிச் செல்வதற்கு வாய்ப்பாக இருக்கும்; மேலும்,இவ்விவகாரங்களை முடிவுக்குக் கொண்டுவர மல்லையா நேரில் ஆஜராவதும் அவசியம்; அவரைப் போலவே மூத்த வங்கி அதிகாரிகளும் நீதிமன்ற அறைக்கு வருவார்கள்” என்றும் வங்கிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விஜய் மல்லையா மார்ச் 31, 2016 வரையிலான அவர், அவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு உள்ள உள்நாட்டு, அயல்நாட்டு சொத்து விவரங்களை ஏப்ரல் 21-ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் வேண்டும் என்று உத்தரவிட்டனர்.அவ்வாறு மல்லையா தமது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யும் அதே வாக்குமூல அறிக்கையில், அவர் நீதிமன்றத்தில் எப்போது ஆஜராவார்? என்பதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று ஆணையிட்ட நீதிபதிகள், மல்லையா ஆஜராவது மிக முக்கியம் என்று நீதிமன்றம் கருதுவதாகவும் தெரிவித்தனர்.முக்கியமாக, மல்லையா தனது நம்பகத்தன்மையை உறுதி செய்யுமாறு ஒரு பெரிய தொகையை வங்கிகளிடம் செலுத்த வேண்டும் என்றவங்கிகளின் நிபந்தனையையும் ஏற்ற உச்சநீதிமன்றம் ஏப்ரல் 21-ம் தேதியன்று தாக்கல் செய்யும் சொத்து விவர வாக்குமூலத்தில் மல்லையா, டெபாசிட்டாக எவ்வளவு செலுத்த முடியும்? என்பதையும் குறிப்பிட வேண்டும் என்றனர்.
மல்லையா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், 2010 முதல்2012 வரை தொடர்ச்சியாக சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளோம் என்று பதிலளித்தார்.
அதற்கு, நீதிபதி நாரிமன் “அவ்வாறு தாக்கல் செய்திருந்தால் என்ன? இப்போது புதிய சொத்து விவரங்களையும் அறிவிக்கலாமே” என்று குறிப்பிட்டார்.நிறைவாக, விஜய் மல்லையாவின் சொத்து விவர வாக்குமூலங்கள் தாக்கலான பின், அதுகுறித்த தங்களது கருத்தை வங்கிகள் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்ரல் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.