sitaram-yechury_650x400_71451132860

கோப்பு படம்

புதுதில்லி, ஏப்ரல் 6-
மேற்கு வங்கத்திற்கு மேலும் கூடுதலாக மத்திய பாதுகாப்புப் படையினரை அனுப்பி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கோரியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு திங்கள் அன்று நடந்து முடிந்தபின் செவ்வாய் அன்று தலைமைத் தேர்தல் ஆணையரை சீத்தாராம் யெச்சூரியும், நிலோத்பால் பாசுவும் சந்தித்தனர். அவரிடம் மேற்கு வங்க நிலைமைகள் குறித்து ஒரு மனுவும் தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
“மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்துள்ள முதல் கட்ட வாக்குப்பதிவு குறித்து முதலில் எங்கள் ஆக்கபூர்வமான திருப்தி உணர்வைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஊடகங்களும் இதே போன்ற உணர்வையே வெளிப்படுத்தி இருக்கின்றன. ஆயினும் எங்கள் ஊழியர்களிடமிருந்து வந்துள்ள சில அனுபவங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.  நாங்கள் எழுப்பிய பல்வேறு பிரச்சனைகளில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து சரி செய்துள்ளதை ஒப்புக்கொள்ளக்கூடிய அதே சமயத்தில், இன்னும் சில இடங்களிலும் பிரச்சனைகள் தொடர்கின்றன என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். சில வாக்குச் சாவடிகளில் மாநிலக் காவல்துறையினர் வாக்குச்சாவடிக்குள்ளேயே இருந்து, வாக்காளர்களிடம் செல்வாக்கு செலுத்த முயற்சித்திருக்கின்றனர். அதுபோன்ற இடங்களில் மாநில காவல்துறை, மத்திய பாதுகாப்புப் படையினரை திசை திருப்பி வேறு இடங்களுக்கு அனுப்பி இருக்கின்றனர். மத்திய பாதுகாப்புப் படையினர் வாக்குச் சாவடிக்குள் இல்லாமல் சில வாக்குச் சாவடிகளில் வெளியே நிற்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
சில வாக்குச்சாவடிகளில் கயவர்கள் கீழ்மைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அங்குள்ளவர்கள் மத்திய பாதுகாப்புப் படை மையத்திற்கு தெரிவித்து பாதுகாப்புப்படையினர் அந்த இடத்திற்கு வருவதற்குள் கயவர்கள் அங்கிருந்து அகன்று இருக்கிறார்கள். இத்துடன் இதற்குமுன் தங்களிடம் எழுப்பிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி,  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிர்பும் மாவட்டத் தலைவர் அம்ருதா மண்டல் மற்றும் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோர் குறித்து கூறியவற்றையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
நாங்கள் முன்பே கூறியதுபோல, அஸ்ஸாம் தேர்தல் முடிந்தவுடன் எந்த அளவிற்கு விரைவாக முடியுமோ அந்த அளவிற்கு விரைவாக, மத்திய பாதுகாப்புப் படையினரை  மேலும் போதுமான அளவில் மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரியும் நிலோத்பால் பாசுவும் தங்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.
(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: