ஜெய்பூர் , ஏப்.5-
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் தலித் சிறுவர் மூன்று பேரை நிர்வாணப்படுத்தி அடித்து ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் சித்ரோகார் மாவட்டம்  பஸ்சி என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சாதிய ஆதிக்க சக்தியினரின் அட்டூழியம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் சாதிய ஆதிக்க பகுதியினர் வசிக்கும் பகுதியில் இரு சக்கர வாகனம் ஒன்றை திருட முயன்றதாக கூறி மூன்று தலித் சிறுவர்களை பிடித்திருக்கின்றனர். 13 வயது முதல் 15 வயது கொண்ட இந்த மூன்று சிறுவர்களையும் கட்டி வைத்து அடித்திருக்கின்றனர். பின்னர் நிர்வாணமாக்கி தெருக்களில் அடித்தவாறே இழுத்து சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் முழுவதும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி யில் பதிவாகியிருக்கிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் காவல்துறையினர் அடிவாங்கிய தலித் சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மிரட்டி வருகின்றனர். ஆனால் நிர்வாணமாக்கி அடித்து ஊர்வலமாக அழைத்து சென்று சாதிய ஆதிக்க சக்தியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து அப்பகுதியினர் தெரிவித்திருப்பதாவது, இப்பகுதியில் உள்ள சாதிய ஆதிக்க சக்தியினர் தொடர்ந்து தலித் மற்றும் கஞ்சர் பழங்குடியினத்தை சேர்ந்த மக்களை மிகவும் கொடூரமாக துன்புறுத்துவது வாடிக்கையான ஒன்று. அதுவும் ஆளும் கட்சியினர் இதனை இன்னும் கூடுதலாகவே செய்வர். தற்போது சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இது ஒரு பிரச்சனையாக மாறியிருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்

Leave a Reply

You must be logged in to post a comment.