கொல்கத்தா, ஏப்.5-
மேற்கு வங்கக் கிராமங்களில் மக்கள் கைகளில் மீண்டும் செங்கொடி படபடத்துக் கொண்டிருக்கும் காட்சிகள் அதிகமாகி வருகின்றன.
அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விட்டு ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி புரிந்துள்ள திரிணாமுல் காங்சிரஸ் கட்சிக்கு எதிராக, செங்கொடியும், பிற ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகளின் கொடிகளும் இணைந்து நிற்பது மக்கள் மனதில் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது. பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியில், இடதுசாரித் தொண்டர்கள் வீட்டுக்கதவுகளைத் தட்டி வாக்குகளைச் சேகரித்து வருகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் ரவுடிகள் இந்தக் கொடிகளைக் கண்டு பின்வாங்குவது நம்பிக்கை உருவாகியிருப்பதற்கு சாட்சியாக நிற்கிறது. ரத்த தாகம் கொண்ட, ஊழல் புரையோடிக்கிடக்கும் இந்த அரசை மாற்ற வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருப்பதை அந்தச் சந்திப்புகளின்போது காண முடிகிறது.
பர்த்துவான் மாவட்டத்தில் உள்ள கல்னா சட்டமன்றத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரசின் வன்முறை வெறியாட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. பிரச்சாரத்திற்காக இடதுசாரித் தொண்டர்கள் வைத்திருந்த தட்டிகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்களை திரிணாமுல் குண்டர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். அப்பகுதி மக்கள் திரண்டு காவல்துறையினருக்கு நெருக்கடி கொடுத்தனர். மக்கள் பெரும் அளவில் அணிதிரண்டதைக் கண்ட காவல்துறையினர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாகுர் அலியின் வீட்டைச் சோதனையிட்டனர். குண்டர்களால் எடுத்துச் செல்லப்பட்ட அனைத்தும் அங்கு இருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களிடம் மீண்டும் அவை ஒப்படைக்கப்பட்டன. அப்பகுதி மக்கள் மத்தியில் இது மேலும் நெருக்கத்தை உருவாக்கியது என்கிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள்.
மேற்கு வங்கத்தின் பல கிராமங்களில் இத்தகைய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு முன்பாக, திரிணாமுல் காங்கிரசின் பயங்கரவாத மிரட்டல் உத்திகளால் ஒடுக்கப்பட்டு நின்றவர்கள், அவற்றை மீறி கிளர்ந்து எழுந்து வருகின்றனர். எங்கெல்லாம் மக்கள் போராடத் துவங்குகிறார்களோ, அங்கெல்லாம் திரிணாமுல் குண்டர்கள் பின்வாங்குகிறார்கள். ஏப்ரல் 4 ஆம் தேதியன்று, பர்த்துவான் மாவட்டத்தில் உள்ள படார், வைத்யாபூர் மற்றும் பர்த்துவான் சதர் ஆகிய இடங்களில் இடதுசாரி மற்றும் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்ற பெருந்திரள் பேரணிகள் நடந்தன. அண்மைக்காலம் வரையில், இந்தப் பகுதிகள் காவல்துறை மற்றும் திரிணாமுல் இணைந்து நடத்திய வன்முறை வெறியாட்டங்களால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளாகும்.
சூர்யகாந்த் மிஸ்ரா
மேற்கு மிட்னாப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சூர்யகாந்த் மிஸ்ரா, ஹவுராவில் நடைபெற்ற கூட்டங்களில் மாநில இடது முன்னணியின் தலைவர் பிமன் பாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மஞ்சுகுமார் மஜூம்தார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஹவுரா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களின் மிரட்டல்களை மீறி இந்தக்கூட்டங்கள் நடந்துள்ளன.
பிர்பும் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் செயலாளராக அனுப்ரதா மொண்டல் இருக்கிறார். அவரது பெயரைக் கேட்டாலே பொதுமக்கள் அலறி ஓடும் நிலை உள்ளது. ஆனால், ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகளின் உதவியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் நானூர், லாப்பூர், கொய்ராஷோல் மற்றும் மயூரேஸ்வர் ஆகிய இடங்களில் பெருந்திரள் பேரணிகளை நடத்தியிருக்கிறார்கள். மிரட்டல்கள் தொடரவே செய்கின்றன. இருந்தாலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையோடு இடது ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் முன்னேறி வருகின்றன.
bengal apr 05

Leave a Reply

You must be logged in to post a comment.