புதுதில்லி, ஏப். 3-
மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் நாளை (திங்கட்கிழமை) முதல்கட்ட தேர்தல் நடக்கிறது.  இதையொட்டி 2 மாநிலங்களிலும் 83 பேரவைத் தொகுதிகளிலும் சனிக்கிழமை மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. மேற்குவங்கத்தில் 18 தொகுதிகளிலும் அசாமில் 65 தொகுதிகளிலும் திங்களன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேற்குவங்க சட்டப் பேரவைக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை வாக்குப்பதிவு நடைபெறும் 18 தொகுதிகளிலும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் 13 தொகுதிகளிலும் காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இவை தவிர பகுஜன் சமாஜ், இதர சிறிய கட்சிகள், சுயேச்சை என மொத்தம் 133 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 4ம் தேதி முதல்கட்டத் தேர்தலில் 65 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் 65 தொகுதிகளிலும் போட்டி யிடுகிறது.
பாஜக கூட்டணியில் பாஜக, அசாம் கண பரிஷத், போடோ மக்கள் முன்னணி கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் 65 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 539 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.