Tripura-CM-with-Kejriwal தேஜ்பூர், ஏப். 3-
அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் கல்லூரி மாணவர்கள், தங்கள் மாநில வளர்ச்சிக்கு மாணிக் சர்க்கார் அல்லது அரவிந்த் கேஜரிவால் போன்ற முதல்வர் தேவை என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்முறையாக வாக்களிக்கும் தேஜ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரிடம் பிடிஐ செய்தியாளர் நடத்திய கலந்துரையாடலில் அவர்கள் கூறியதாவது:
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுக்கு மாற்றம் தேவை என்பது உறுதியான ஒரு விஷயமாகும். அந்த மாற்றம் சற்று சிறப்பாக இருக்க வேண்டும். வரும் தேர்தலில் தற்போது ஆளும் காங்கிரஸுக்கு மாற்றாக தங்களுக்கு வாக்களிக்குமாறு பாஜக கோருகிறது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சில விவகாரங்கள் எங்களை கவலையடையச் செய்கின்றன. அஸ்ஸாம் மாநிலத்திற்குள் ஆர்எஸ்எஸ் நுழைந்தால் அது இனரீதியிலான பிளவுக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் அச்சமடைகிறோம். முன்பெல்லாம், யார் எதை உண்டாலும் நாங்கள் கவலைப்படாமல் இருந்தோம். ஆனால் தற்போது “அவர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார், இவர் பன்றி இறைச்சி சாப்பிடுகிறார்’ என்று மாணவர்கள் பேசுகின்றனர். இந்தப் போக்கு ஆபத்தானது.
அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய்க்கு எதிராக பாஜக பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் தங்களுடைய திட்டங்கள் என்ன என்பது குறித்து அக்கட்சி கூறவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் அது ஆபத்துதான் என்றாலும், ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக அந்த ஆபத்தை ஏற்க தயாராக உள்ளோம்.
ஒருவேளை அஸ்ஸாமின் வளர்ச்சிக்கு பாஜகவும் நல்ல திட்டங்களை வகுக்கவில்லை எனில், அடுத்த தேர்தலில் அவர்களுக்கு மாற்றாக வேறு கட்சியைத் தேர்ந்தெடுப்போம். கடந்த 3 முறையாக காங்கிரஸ் ஆட்சி நடத்தியபோது அஸ்ஸாம் வளர்ச்சியடையவில்லை என்பது உண்மை. ஆனால் மக்கள் விரும்புவது அதிகமான முன்னேற்றத்தையே.
ராகுல் காந்தி மீதும், அவரது கருத்துகளின் மீதும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். மாநில முன்னேற்றம் குறித்து அனைவரும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் பேசுகிறார்; வெறும் வார்த்தைகளால் மட்டுமே எதுவும் நடந்துவிடாது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தை எப்படி வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வர் என்பதை அரசியல் தலைவர்கள் விளக்கி, எங்களை திருப்திப்படுத்த வேண்டும்.
திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரைப் போல மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும், அனைத்து மதங்களின் நலன்களுக்காகவும் பாடுபடுபவர் எங்கள் மாநில முதல்வராக வேண்டும் என்று மாணவர்கள் தங்கள் விருப்பங்களை தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: