YSRCP MLA Roja Fires On Pawan Kalyan And Chandrababu Over Special Status
நகரி, ஏப். 3-
ஆந்திர சட்டமன்ற உரிமைக்குழு நடிகை ரோஜாவுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில், 6ம் தேதி உரிமைக்குழு முன் ஆஜராகி தாங்கள் விளக்கம் அளிக்கலாம் என்று கூறியுள்ளது.
ஆந்திர சட்டசபையில் இருந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ-வான நடிகை ரோஜா ஒரு ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகை ரோஜா ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி சஸ்பெண்டு நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து சட்டசபைக்கு செல்ல முயன்ற அவர், உள்ள அனுமதிக்கப்படவில்லை. சபாநாயகர் உத்தரவு இல்லாமல் சபைக்குள் அனுமதிக்க முடியாது என்று சபை காவலர்கள் கூறிவிட்டனர். இதனை எதிர்த்து ரோஜா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே அரசு அப்பீல் மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்ற பெஞ்ச் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகை ரோஜா உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்தார். இந்த மனு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது. அதில் தனி நீதிபதி உத்தரவுபடி என்னை சபைக்குள் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சட்டமன்ற உரிமைக்குழு நடிகை ரோஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘‘6ம் தேதி உரிமைக்குழு முன் ஆஜராகி தாங்கள் விளக்கம் அளிக்கலாம்’’ என்று கூறியிருந்தது. சட்டமன்ற செயலாளர் சத்திய நாராயணா இந்த நோட்டீசை அனுப்பி உள்ளார். மன்னிப்பு கேட்டால் ரோஜா மீதான சஸ்பெண்டு நடவடிக்கையை மறு பரிசீலனை செய்யப்படும் என்று உரிமைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால் செய்யாத குற்றத்திற்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும், அவ்வாறு மன்னிப்பு கேட்டால் நான் தவறு செய்தது உண்மை என்று ஆளும் கட்சியினர் வாதிடுவார்கள் என்றும் ரோஜா ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.