விஜயராஜ்அம்பத்தூர், மார்ச் 31-
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில் கன்னி வெடியில் சிக்கி துணை ராணுவப் படையினரான சிஆர்பிஎப் வீரர்கள் 7 பேர் பரிதாபமக உயிரிழந்தனர்.
தண்டேவாடா மாவட்டத்தின் மெலாவாடா கிராமம் வழியாக மத்திய ரிசர்வ் காவல் படையினர் வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருக்கும் போது, கன்னி வெடியில் சிக்கிய வாகனம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த வாகனத்தில் இருந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பலியான 7 பேரில் சென்னை அம்பத்தூர் ரவி பாரதி நகர் தாமோதரன் தெருவில் உள்ள பாக்கிய ரதி நிவாசில் வசித்த டி.விஜயராஜ் (48) என்பவருமாவார். இவர் அந்த படைப் பிரிவில் டெலி கம்யூனிகேஷன் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கடந்த இரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் அம்பத்தூர் வந்திருந்தார். விடுமுறை முடிந்து மார்ச் 15ம் தேதிதான் இங்கிருந்து கிளம்பினார். 16ம் தேதி பணியில் சேர்ந்தார். 17ம் தேதி அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை நடைபெற்ற மாவோயிஸ்ட் கன்னி வெடி தாக்குதலில் சிக்கி விஜயராஜ் பரிதாபமாக பலியானார். பலியான விஜயராஜுக்கு ஷர்மிளா என்ற மனைவியும், திருமங்கலம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் நிஷா என்ற மகளும் உள்ளனர்.
அம்பத்தூரில் இருந்து சென்ற 15 நாட்களில் அவர் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடத்திலும், நண்பர்களிடத்திலும், அப்பகுதி மக்களிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.