டேராடூன், மார்ச் 29-
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் 9 எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சர் ஹரீஷ் ராவத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பாஜக-வுடன் இணைந்து புதிய அரசு அமைக்கவும் முயன்றதால், ஹரீஷ் ராவத் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபையை முடக்கி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து ஹரீஷ் ராவத் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயர்நீதிமன்றம் வரும் 31ம் தேதி உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் ஹரீஷ் ராவத் ஆட்சி மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த ஓட்டெடுப்பில் காங்கிரசில் இருந்து கட்சிதாவிய எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து ஹரீஷ் ராவத் கூறுகையில், “இந்த தீர்ப்பு மத்திய அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். காங்கிரஸ் கட்சியும் எங்கள் அரசும் நீதித்துறை மீது மரியாதை வைத்துள்ளது. மத்திய அரசின் முடிவு தவறு என அந்த தீர்ப்பின் ஒரு பகுதியில் கூறப்பட்டுள்ளது.
மார்ச் 28ம் தேதி சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஆளுனர் கே.கே.பால் உத்தரவிட்டார். ஆனால் அதற்கு எதிராக மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியுள்ளது. எங்கள் போராட்டம் எந்த ஒரு தனி நபருக்கும் எதிரானதல்ல, அரசியலமைப்பை அழிக்கும் சக்திகளுக்கு எதிரானது. அத்தகைய சக்திகளுக்கு இப்போது மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இனி எதிர்க்கட்சிகள் ஆளும் பிற மாநில அரசுகளின் ஸ்திரத்தன்மையை குலைக்க முயற்சிக்க மாட்டார்கள் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.