புதுதில்லி, மார்ச் 29-
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தையே மிரட்டும் விதத்தில் முதல்வரும் திரிணாமுல் காங்கிரசாரும் பேசி வருகின்றனர் இவற்றுக்கு எதிராக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனில் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மைக்கே பாதிப்பு ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயலக உறுப்பினர் நிலோத்பால் பாசு, தலைமைத் தேர்தல் ஆணையரிடம் கூறினார்.
இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயலக உறுப்பினர் நிலோத்பால் பாசு தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து, மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ள சில பிரச்சனைகளை அவரது கவனத்திற்குக் கொண்டு வந்தார். தேர்தல் நடைமுறைகள் முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கும்வரை தேர்தல் நடத்தை விதி அமலாக்கம் தலைமைத் தேர்தல் ஆணையரின் கட்டுப்பாட்டில்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் மேற்கு வங்க நிலைமைகளைப் பார்க்கும்போது அங்குள்ள மாநில காவல்துறை இன்னமும் மாநில அரசின் கட்டுப்பாட்டின்கீழ்தான் இயங்கி வருவது நன்கு தெரிகிறது. காவல்துறை அதிகாரிகள் மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டால் தேர்தல்களை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்த முடியாது.  இது தொடர்பாக தாங்கள் தெளிவான அறிவிப்பினை வெளியிட வேண்டும்.
மத்திய பாதுகாப்புப் படையினர் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நிறுத்தப்படுவர் என்று தொடக்கத்திலேயே தலைமைத் தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்டது. மேலும் கூடுதலாகவும் மத்தியப் பாதுகாப்புப் படையினர் அனுப்பப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. ஆயினும், முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு மத்திய பாதுகாப்புப் படையினர் அனுப்பப்படுவது குறைக்கப்பட்டிருக்கிறது அல்லது கலைக்கப்பட்டுவிட்டது என்று வலுவான வதந்திகள் உலாவந்துகொண்டிருக்கின்றன. இது உண்மையானால் மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது இருந்த நம்பிக்கை மற்றும் ஆர்வம் உளவியல்ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.
பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து இடது முன்னணி வேட்பாளர்கள் தேர்தல் நோக்கர்களுக்கு உரியமுறையில் எச்சரித்தும், அதனைத் தணிக்கக்கூடிய விதத்தில் மத்திய பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்போ, நடவடிக்கைகளோ மேற்கொள்ளப் படவில்லை.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உள்கட்சி தகராறில் ஒருவர் கொல்லப்பட்டதை சாக்காக வைத்துக்கொண்டு இடதுமுன்னணி ஊழியர்களை காவல்துறையினர் வேட்டையாடி வருகின்றனர். குறிப்பாக சம்பவம் நடந்த சமயத்தில் எங்கோ தொலைதூரத்தில் இருந்த முக்கிய இடது முன்னணி தலைவர்கள் பெயர்கள் எல்லாம் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. உண்மையில் சம்பவம் நடைபெற்ற சமயத்தில் ஸ்தலத்தில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் (இவர் அம்மாநில அமைச்சரும் ஆவார்)   இருந்திருக்கிறார். இதேபோன்று மற்றொரு இடத்திலும் போலீஸ் நடந்து கொண்டிருக்கிறது.
மேலும் தேர்தல் நாளன்று பிரச்சனைகள் ஏதுமின்றி சுமுகமாக நடத்துவதற்கு மாநில இடது முன்னணி சார்பில் பல யோசனைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம்.
மாநிலத்தில் கைப்பற்றப்பட்டுள்ள வெடிகுண்டுகள் எண்ணிக்கை பெயரளவிலானதே. இன்னும் ஏராளமான அளவில் அங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் கைப்பற்ற வேண்டும். அதேபோல் கைது செய்யப்பட்டுள்ள ரவுடிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவே.  அதேபோன்று சாரதா சீட்டு நிதிநிறுவனத்தின்மூலம் கொள்ளையடித்த பணமும், நாரதா நியூஸ் சானலில் காண்பிக்கப்பட்டதுபோல் களவாடிய பணமும் தேர்தலில் பயன்படுத்தப்படும் என்று சந்தேகம் இருக்கிறது. அதனையும் தடுத்துநிறுத்திட உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

14-mamata-angry 30-mamata-banerjee-pic
மாநில முதல்வரும் அவரது அடியாள்களும் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை மிரட்டும் விதத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றுக்கு எதிராக தேர்தல் ஆணையும் எவ்வித எதிர்வினையும் ஆற்றவில்லை. இவற்றுக்கு எதிராக தாங்கள் கடுமையான முறையில் எதிர்வினையாற்றவில்லை எனில் மக்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையே பாதிப்புக்குள்ளாகும். தேர்தல் ஆணையத்திற்கு எதிராக அவர்கள் ஆற்றிய உரைகளை இத்துடன் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு நிலோத்பால் பாசு அந்த மனுவில் கூறியிருக்கிறார்.
(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.