புதுதில்லி, மார்ச் 29-
உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு, அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“உத்தரகண்ட் மாநில ஹரீஷ் ராவத் அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டிருப்பதானது ஜனநாயகத்தின் மீதான மிகவும் வெட்கக்கேடான தாக்குதலாகும், அரசமைப்புச்சட்ட நெறிமுறைகளை வெளிப்படையாகவே மீறும் செயலாகும். ஆளுநர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சட்டமன்றத்தில் முதல்வர் தன் பெரும்பான்மையை நிலைநாட்டிட சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் அதற்கு ஒரு நாள் முன்பு இவ்வாறு மத்திய அரசு தலையிட்டிருப்பது நிச்சயமாக சட்டவிரோதமானதும், அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானதுமாகும்.
உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டிருப்பதும், இதற்கு முன்பு அருணாசலப்பிரதேசத்திலும் இதேபோன்ற நிகழ்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதும் மோடி அரசாங்கம், எதிர்க்கட்சிகளால் நடத்தப்பட்டு வரும் மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்கு அரசமைப்புச்சட்டத்தின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்துவதையே காட்டுகிறது. இதனை அனுமதிக்க முடியாது.  இதற்கு அடிப்படைத் தீர்வு அரசமைப்புச்சட்டத்திலிருந்து 356ஆவது பிரிவையே நீக்குவதுதான் என்றபோதிலும், உச்சநீதிமன்றம் முன்னுரிமை அடிப்படையில் இந்தப் பிரச்சனையை எடுத்துக்கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக எஸ்.ஆர். பொம்மை தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை உளப்பூர்வமாகப் பின்பற்றுவதை உத்தரவாதப் படுத்திட வேண்டும்.’’
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.
(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.