திருமண நிகழ்ச்சிகளுக்குச் செல்பவர்களில் சிலர் மணமக்களின் இணைப் பொருத்தம் குறித்து ஏதேனும் குறை காண்பவர்களாகவே இருப்பர். மண வீட்டாரைப் பொறுத்த அளவில் விருந்து சிறப்பாகஅமைய வேண்டுமே என்பதில் கவனம் செலுத்துவார்கள். எவ்வளவுதான் அருமையான விருந்தாகஇருந்தாலும் குற்றம் கூறுவதற்கென்றே சிலர் வருவர்.உணவு விடுதிகளில் “குறைகளை எங்களிடம் கூறுங்கள்; நிறைகளை உங்கள் நண்பர்களிடம் கூறுங்கள்” என்ற அறிவிப்புப் பலகையைக் கண்டிருக்கிறேன்.ஒருவரைப் பாராட்டுவதற்குப் பெருந்தன்மை வேண்டும். “உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பது பழமொழி. பசித்த வேளையில் சுவையான உணவு கிட்டும்போது “வயிறார உண்டு வாயார வாழ்த்துவது” இயல்புதான். “உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே” என்கிறது மணிமேகலை.

மன்னனின் திருமணத்திற்குச் சென்று கூட்டநெரிசலில் சிக்கித்தவித்து இறுதியில் “சோறுண்டிலேன்” என்று பரிதாபமாகக் கூறியஒளவையார் ஆற அமர மிகச் சுவையான விருந்துண்ட நிகழ்ச்சியும் அவருடைய வாழ்வில் இடம் பெற்றது.ஒருமுறை ஒளவையார் மழையில் நனைந்து குளிரால் நடுங்கிக் கொண்டு இளம்பெண்கள் இருவர் இருந்த வீட்டிற்குச் சென்றார்.ஒளவையார்க்கு மாற்றுடை தந்து குளிர் காயச் செய்த அப்பெண்கள் அவர்தம் பசி நீக்க விரைந்து செயல்பட்டனர்; அடுப்பு மூட்டினர்; கேழ்வரகுக் களி கிண்டினர்; நெய்விட்டு முருங்கைக் கீரையை வதக்கினர்.உணவின் சுவையால், மன நிறைவுற்ற ஒளவையார் வியப்பும் களிப்பும் ஒருங்கிணைய அற்புதமான பாடலைப் பாடினார்.

“வெய்தாய் நறுவிதாய் வேண்டள வுந் தின்பதாய்நெய்தான் அளாவி நிறம்பசந்த – பொய்யாஅடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்கடகம் செறிந்த கையார்”.

“அமுதம்” என்றது கேழ்வரகுக் களியென்று உரைக்குறிப்பில் காணப்படுகிறது. மழையில் நனைந்து வந்தஒளவைக்குச் சூடாக, அப்பொழுதுதான் சமைத்த களியென நாம் அறிய “வெய்தாய்” என்ற சொல் வருகிறது. “நறுவிதாய்” என்றால் நல்ல மணமுடைய என்னும் பொருளாகும்.குன்றா அளவிற் பரிமாறியதை “வேண்டளவுந் தின்பதாய்” என்றார். “அடகென்று” சொல்வது முருங்கைக் கீரையைக் குறிக்கும். அதனை நெய்யூற்றி வதக்கும்போது அதன் ருசியே தனிதான். கீரை பசுந்தழை என்பதையே “நிறம் பசந்த” எனக் கூறுகிறார். “கடகம்” என்பது வளையல் போன்று கையில் அணிவதாகும்.விருந்தளித்த நங்கையர் இருவரின் மனம் குளிர்ந்தது போன்று பாடலைப் படிக்கும் நமக்கு நாவில் எச்சில் ஊறுவதும் தவிர்க்க இயலாததாகும்.

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந் திரிந்து நோக்கக் குழையும் விருந்து” என்கிறார் வள்ளுவர்.வீட்டுக்கு அழைத்து வரும் விருந்தினரை மனைவியும் முக மலர்ச்சியுடன் வரவேற்க வேண்டுமே என்ற கவலை பலருக்கு ஏற்படுவதுண்டு.ஆனால் விருந்தாளியை ஒரு குழந்தையாகக் கருதி இன்மொழி கூறி உணவுண்ணச் செய்த குப்பச்சியாயி என்னும் பெண்மணியைப்பற்றிக் காளமேகப் புலவர் பாடியுள்ள பாடலைக் காண்போம்:

“சோற்றை அரசிலைமேல் தூவி வழுதுணங்காய்க் கீற்றை அதன்மேற் கிடத்தியே – ஆற்றிமிக அப்பச்சி கண்ணே அரசே அருந்தென்பள்குப்பச்சி யாயி குணம்”.‘வழுதுணங்காய்’ என்பது கத்தரிக்காயாகும். உணவு எளிமையாக இருந்தாலும் உபசரிப்பின் மேன்மை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. விருந்தாளியை “அப்பா!கண்ணே! என் ராசா” என்று கொஞ்சியும் கெஞ்சியும் உண்ண வைப்பது அம்மையாரின் பண்பாகும்.இத்தகைய பண்பு விருந்தோம்பலுக்குக் கூடுதலான சிறப்பைத் தருவதாகும்.

குப்பாச்சியாயி விருந்தளித்ததைப் பாடலாகப் பாடியுள்ள காளமேகப் புலவரின் பண்பு பாராட்டுக்குரியதாகும். மன்னர்களையும் மாவீரர்களையும் மட்டுமே பாடிக் கொண்டிருந்த புலவர்கள் கூட்டத்தில் புலவர் போன்ற சிலர் விதிவிலக்காக இருப்பது மகிழ்தற்குரியது.நாம் சோறு உண்ணும்போது சாம்பார், ரசம், மோர் என்று ஒருவரிசைமுறையைப் பின்பற்றுகிறோம். இதில் ரசத்துக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. சில சமயங்களில் தக்காளி, கொத்துமல்லி, மிளகு, பைனாப்பிள் என்று சிறப்பு ரசங்களும் ருசிக்காக மட்டுமின்றி மருத்துவ குணங்களுக்காகவும் விரும்பிச் சேர்க்கப்படுகின்றன. ரசம் வைப்பது ஒரு கலை என்றுகூடக் கூறலாம். சிலருக்கு மட்டுமே ருசியான, மணமான ரசம் வைக்கும் கைப்பக்குவம் அமைந்துவிடுகிறது என்று சொல்வார்கள்.சுப்பையர் என்று ஒரு கவிஞர். அவர் ஒருமுறை சோமரசம்பேட்டை என்ற ஊருக்குச் சென்றார்.

அங்கு சுப்பம்மாள் என்ற பெண்மணியின் இல்லத்தில் உணவுண்டார். அம்மையார் வைத்த ரசத்தையும் சோற்றையும் அவர் புகழ்ந்ததைக் காணுங்கள்:

“சோம ரசம்பேட்டை சுப்பம்மாள் வைத்தரசம்காமரச மெல்லாம் கசக்குமே – நேமமுடன்அன்னத்தைக் கண்டக்கால் அன்னம் வெளுப்படையும்என்னத்தைச் சொல்வேன் இனி”.

சுப்பம்மாள் ரசத்தின் முன் காமரசமும் கசக்குமாம்!அம்மையார் வடித்த சோற்றின்வெண்மைக்கு முன் வெண்ணிற அன்னப் பறவையே தோற்றுவிடுமாம்!புலவர்கள் மூவரும் உண்ட விருந்து நம் சிந்தைக்கும் விருந்துதானே!

Leave a Reply

You must be logged in to post a comment.