தமிழகத்தில் கொங்கு நாட்டுப் பகுதியில் பொருனையாற்றின் (அமராவதி) கரையில் கருவூர் அமைந்துள்ளது. இன்று தனி மாவட்டமாகத் திகழும் கருவூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே சுமார் 77 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. காவிரியும் அமராவதி ஆறும் இவ்வூரினை வளமானதாக மாற்றியிருந்தன. தமிழகத்தின் மிகப் பழையநகரமான கருவூர் சேர அரசர்களின் கொங்குப்பகுதியின் தலைநகராக விளங்கியது. சங்க இலக்கியத்தில் கருவூர் குறித்து ஓர் இடத்திலும் வஞ்சி குறித்து ஆறு இடங்களிலும் பதிவுகள் இடம் பெற்றுள்ளன. ‘சங்ககாலத்தின் இறுதியில் குறிப்பாக கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் இரண்டு கருவூர்கள் இருந்தன. அவற்றில் ஒன்று மேற்குக் கடற்கரையில் அமைந்திருந்தது.

இதுவே சேரனின்தலைநகர் என்றும் கொங்குப் பகுதியில் சேரனின் கட்டுப்பாட்டில் ஒரு கருவூர் இருந்தது என்றும்’ ஆய்வாளர் மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிடுவார். இருந்தபொழுதும் இன்று கேரளநாட்டில் மொத்தம் மூன்று கருவூர்கள் உள்ளதைப் பார்க்கலாம். கொங்குநாட்டில் இருந்த கருவூரே, ‘வஞ்சி’ என சிறப்பிக்கப்பட்டதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. சேரனின் துறைமுகப்பகுதியில் அமைந்திருந்த கருவூர் குறித்து இலக்கியப் பதிவுகள் இல்லை. சங்க இலக்கியம் பதிவு செய்யும் கருவூர் எது? வஞ்சி எது? என்ற அடிப்படையில் முன்வைக்கப்படும் விவாதங்களில் ஆய்வுக் கண்ணோட்டத்தின் படி நாம் ஆராய்ந்தால் இதற்குச் சரியான விடை கிடைக்கும். சங்க இலக்கியம், தொல்லியல் ஆய்வு முடிவுகள், நிலவரைபடப் பதிவுகள் என்ற பகுப்பில் கருவூரின் அமைவிடம் குறித்து இனி பார்ப்போம்.

முதலில் சங்க இலக்கியத்தில் கருவூர் குறித்தப் பதிவுகளைத் தொகுப்பாகப் பார்க்கலாம்: 1) புறம் 11 ஆம் பாடல் வஞ்சி, பொருனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது என்றும் அங்கு பெண்கள் மணல் வீடு கட்டி அதில் பாவை அமைத்து அதற்குப் பூச்சூட்டி விளையாடுவர் என்றும் குறிப்பிடுகின்றது. 2) பெரிய கொடிகள் கட்டப்பட்டு சேரனின் வஞ்சி மாநகர் சிறப்பாக இருந்தது.3) செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற சேர அரசன் காலத்தில் பொருனையாற்றுக் கரையில் அமைந்திருந்த வஞ்சியில் வயல் சூழ்ஊர்கள் பல இருந்தனவென்று புறம். 387 பாடல் கூறுகின்றது. மேலும். சிறுபாண். வரி.50, அகம். 263, 396 ஆம் பாடல்கள் சேரனுடையதே வஞ்சி மாநகர் என்று குறிப்பிடுகின்றன. 4) சேரனின் செல்வம் கொழிக்கும் சிறப்பினை உடைய அகன்ற நகரமாக கருவூர் குளிர்ச்சியான தெளிந்த நீரை உடைய பொருனை ஆற்றின் துறையிடத்து உள்ளது. (அகம். 93)5) சோழன் கிள்ளிவளவனால் வஞ்சி நகரம் வெற்றி கொள்ளப்பட்டது பற்றி புறம்.

373 ஆம்பாடல் பதிவு செய்கின்றது. மேலும் ‘கோவூர்கிழார்’ என்ற புலவர் சோழன் ‘நலங்கிள்ளி’ வஞ்சியைப் பரிசாகத் தருவான் என புறம். 32 ஆம் பாடலில் குறிப்பிடுவதன் மூலம் ‘வஞ்சி’(கருவூர்) சேரர்களிடமிருந்து பிற்காலத்தில் சோழர்களால் கைப்பற்றப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது என்பதை அறிய முடிகின்றது. இந்நிலையில் கருவூரின் அமைவிடம் குறித்து ஆய்வாளர்கள் முன்வைக்கும் பொருத்தமற்ற ஓர் ஆய்வினைப் பார்ப்போம். அதாவது, சோழன் கோப்பெரு நற்கிள்ளி யானை மீது அமர்ந்து கருவூர் நோக்கிப் படையெடுத்து வர அப்பொழுது யானைமதம் பிடித்து வஞ்சிநகரை நெருங்கி வருவதைக் கண்ட சேர அரசன் அந்துவஞ்சேரல் தன்னுடன் இருந்த முடமோசியார் புலவரிடம், ‘யானை மேல் இருந்து துன்பப்படும் இவன்யார்?’ என்று கேட்க, அதற்கு அவர் ’இவன்தான் சோழ மன்னன்’ என்றும் அவன் மதம்பிடித்த யானையிடம் இருந்து தப்புவான் எனக் கூறுவதாகவும் புறம்.13 ஆம் பாடலுக்கு ஆய்வாளர்களால் விளக்கம் அளிக்கப் படுகின்றது. இது தவறான விளக்கமாகும். இதன் வழி அவர்கள் நிறுவ முயல்வது யாதெனில் ‘சோழ நாட்டில் இருந்து யானையின் மீது அமர்ந்தே கருவூர் பகுதிக்கு எளிதாக வரலாம்’ என்பதே. சேர நாட்டு கருவூர் என்பது சோழ நாட்டிற்கு அருகில் இருந்த கருவூர் தான் என வாதிடுவதற்காக இவ்வாறு அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

இது பொருத்தமற்றதாகும். சங்க இலக்கியத்தில் உள்ள புறம் 13 ஆம் பாடலில் எந்த இடத்திலும்நாம் பார்த்த உரையாடலைக் காணமுடியாது.இவ்வாறு, அவர்கள் வசதிக்காக சேர்த்துக் கொள்ளப்படும் இதுபோன்ற புனைவுக் குறிப்புகள் பொருத்தமற்றதாகவே உள்ளன. மேலும் ‘சேர அரசனுக்கு யானை மீது அமர்ந்துள்ள சோழ அரசனை அடையாளம் தெரியாமலா இருக்கும்’ என்ற கேள்வியை எழுப்பினால் இது பொய்யான புனைவு என்பது மேலும் உறுதிப்படும். கருவூர் அமைவிடம் குறித்து மாறுபட்ட ஆய்வு முடிவுகள் உள்ள நிலையில் இன்று கேரள நாட்டில் ஆலப்புழாவிற்கு கீழே, ‘பம்பா’ ஆற்றுப் பகுதியில் அரபிக்கடல் பகுதியினை ஒட்டி கருவூர் என்ற பெயரில் ஓர் ஊர்அமைந்துள்ளதைப் பார்க்கலாம். (பார்க்க வரைபடம்) இவ்வமைவிடத்திற்கும் சங்க இலக்கியம் குறிப்பிடும் ‘பொருனை ஆற்று’ப்பகுதியில் உள்ள கருவூருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை வரைபடத்தைப் பார்த்தாலே உணர முடியும். இவ்வூர் சங்ககாலத்திற்குப் பிந்தையது என்றும் தமிழகத்தில் உள்ள கருவூர் பகுதியை சேரர்கள் சோழர்களிடம் தோற்றபின், அதாவதுகி.பி 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டுக்குப் பின்உருவாக்கிக் கொண்ட பகுதி என்றும் ஆய்வாளர் மயிலை சீனி. உட்பட சிலர் முன் வைக்கும்கருத்துகள் பொருத்தமானதாகவே தோன்றுகின்றது.

மாறாக, இதுபோன்றே கேரளாவில் உள்ள ‘திரிசூர்’ பகுதியிலும், ’கோடக்கரா’ப் பகுதியிலும் கருவூர் என்ற பெயர்களில் சில ஊர்கள் அமைந்துள்ளதையும் அறியலாம். இவை பிற்காலத்தவை. இவற்றுக்கும் சங்க இலக்கியம் குறிப்பிடும் கருவூர் பகுதிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. சேரர்கள் முசிறி, தொண்டி முதலான துறைமுகப் பட்டினங்களோடு தமிழகத்தில் உள்ள கருவூரினையும் அதிகார மையம் உள்ளதலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்கள். இது போன்றே சங்க காலத்தில் உறையூர், காவிரிப் பூம்பட்டினம் இரண்டு பகுதிகளையும் அதிகார மையப்பட்ட இடமாகக் கொண்டு சோழர்களும், மதுரை, கொற்கை முதலானப் பகுதியை அவ்வாறே அதிகார மையப்பட்ட தலைநகர் பகுதியாகக் கொண்டுபாண்டியர்களும் ஆட்சி செய்தனர் என்பதை அறியலாம். போக்குவரத்து வசதி பெரிய அளவில் வளர்ந்திடாத அக்காலகட்டத்தில் பகுதிவாரியாக அதிகார மையங்களை அமைத்து அதனை ஒருங்கிணைத்து சரியாகநிர்வகிப்பதன் மூலமே ஓர் பேரரசு தன்னைஅன்றைய காலத்தில் நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்ற சூழலே ஓர்அரசனுக்கு 2 தலைநகரங்கள் இருந்தமைக்கான காரணமாகும். பொருனை ஆற்றுப் பகுதியில் இருந்த கருவூர், வஞ்சி இரண்டும் ஒன்று தான் என்பதைக் குறிக்கும் வலுவான ஆதாரமாக அகம். 93 பாடல் உள்ளது.

‘திரு மாவியல் நகர்க்கருவூர் முன்துறை / தெண் நீர் உயர் கரைக்குவைஇய / தண் ஆன் பொருனை மணலினும் பலவே.’ என்ற வரிகள் இதற்கு தக்கச் சான்று. மேலும் ‘தண்பொருனைப் புனல் பாயும் / விண்பொரு புகழ் விறல் வஞ்சி’ (புறம். 11) என்ற அடிகள் மூலம் வஞ்சியும், கருவூரும் ஒன்றே என்பதும் புலப்படும்.சூடாமணி நிகண்டு ‘கொங்கன்’ என்பதற்கு கொங்கு நாட்டை ஆட்சி செய்த வஞ்சியைத் தலைநகராகக் கொண்ட சேரன் என்றும் ‘பொருனை ஆற்றோன்’ என்பதற்குப் பொருனை ஆற்றை உடைய சேரலாதன் என்றும் செய்யுள் 119 இல் விளக்கம் அளிக்கின்றது. கருவூர் கிழார், கருவூர் கோசனார், கருவூர் சேரமான் சாத்தன் என இவ்வா றாக 11 புலவர்கள் சங்ககாலத்தில் கருவூர் பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதை அவர் களின் பெயர்களைக் கொண்டு அறியலாம்.

இவ்வாறு தமிழ் இலக்கியங்களைக் கொண்டுவஞ்சி (கருவூர்) அமைவிடத்தை அறிந்துகொள்கின்ற நிலையில், அப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் என்னசொல்கின்றன என்பதைப் பார்ப்போம். பெருங்கற்காலம், சங்ககாலம் எனத் தொடர்ச்சியாக கருவூர் பகுதியில் தொல்லியல் தடயங்கள் கிடைக்கின்றன. இவை அப்பகுதியின் தொன்மைக்குச் சான்றுகளாக உள்ளன. கருவூரைச் சுற்றியுள்ள பல ஊர்களில் ‘நத்தமேடு’ என அழைக்கப்படும் பழைமையான மண்மேடுகள் காணப்படுகின்றன. இவ்விடங்களில் கிடைக்கும் தொல் பொருட்களான, கருப்பு -சிவப்பு பானை ஓடுகள், சுடுமண் பொம்மைகள், குறியீடுகள் உள்ள தாழி ஓடுகள் முதலானவைக் குறிப்பிடத்தக்கவை யாகும். இதுபோன்றே அமராவதி ஆற்றுப் பகுதியில் கிடைத்த சங்ககால ஆண்-பெண் உருவம் பொறித்த வெள்ளிமோதிரம் முக்கியமானதாகும். மேலும் கருவூர் பகுதியில் கிடைத்த ‘தித்தன்’ என்ற அரசன் பெயர் பொறித்த வெள்ளி மோதிரம், சேரரின் செப்புக் காசுகள், பாண்டியரின் செப்புக் காசுகள், தமிழி (பிராமி) எழுத்துப் பொறிப்புள்ள ‘வேளிர் சாம்பான்’ என்ற பெயர் பொறித்த வெள்ளி மோதிரம் முதலியன குறிப்பிடத்தக்கவையாகும். சேரமான் மாக்கோதையின் பெயரும் அவன் உருவத்தோடும் உள்ள காசு ஒன்றுஅமராவதி ஆற்றுப் பகுதியில் கிடைத்துள்ளது. காசின் முன்புறம் தமிழி எழுத்தும் பின்புறம் அரசனின் மார்பளவு உருவமும் அமைந்துள்ளது. இதன் காலம் கி.பி 1 என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும்இரும்பொறையின் காசுகளும் கிடைத்துள்ளன. இது போன்றே உரோமானியர்களின் காசுகள் பல கருவூரினைச் சுற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது. கருவூர் பகுதி வர்த்தகம் சார்ந்த தலைநகராக இருந்தமையால் தான்இவ்வாறான காசுகள் பல இப்பகுதியில் கிடைத்துள்ளன. மேலும் சேரர்களின் காசுகள் இப்பகுதியில் கிடைத் திருப்பது சேரர்களின் தலைநகராகக் கருவூர் இருந்துள்ளதை மேலும் உறுதிப்படுத்துகின்றன. சங்க காலத்தில் தமிழக மேற்கு-கிழக்குக் கரையை இணைக்கும் பெருவழியானது கருவூர் வழியாகவே சென்றது. ரோம் நாட்டுவணிகர்களும் இவ்வழியைப் பயன்படுத்தினர்.

வடநாட்டில் இருந்து வருபவர்கள் பழைய எருமை நாடு (மைசூர்) வழியாக வந்து அங்கிருந்து ‘கஜல்ஹத்தி’ கணவாய் வழியாக (இன்றைய மேட்டூர் அணைப்பகுதி) வடகொங்கு பகுதியை அடைந்து பின்னர் கருவூரினை அடைவார்கள். இந்த வழியினைப் பயன்படுத்தியே சங்ககாலத்தில் சேரனின் வட நாட்டுப் பயணம் அமைந்திருந்தது என்பதை ‘சமூகக் கல்வி இயக்குநர்’ மலையூர் இரா. ஆறுமுகம் ஐயா விளக்கினார்.நாம் இன்று நிலவரைபடத்தின் வழி சேர நாட்டில் அமைந்திருந்த கருவூர் பகுதியையும் தமிழகத்தில் அமைந்திருந்த கருவூர் பகுதியினையும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். மாறாக சேர நாட்டு கடற்கரைப் பகுதியில் அமைந்திருந்த கருவூர் பகுதியில் புதிய தொல்லியல் தரவுகள் கிடைக்குமாயின் ‘கருவூர்’ பகுதி குறித்த வரலாறு மேலும் புதிய தளத்தில் செழுமையடையும்.

Leave A Reply

%d bloggers like this: