ஒரு அவதூறு வழக்கு அல்ல; எத்தனை வழக்கு வேண்டுமானாலும் திமுக தொடரட்டும் அதைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளரும், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.தேர்தல் கூட்டணிக்காக தேமுதிகவுக்கு ரூ. 500 கோடியும், 80 தொகுதிகளும் தருவதாகச் சொல்லி திமுக பேரம் பேசியதாக பத்திரிகைகளில் வந்த செய்தியைச் சுட்டிக்காட்டி, ஓரிரு நாட்களுக்கு முன்பு வைகோ பேட்டி அளித்திருந்தார். இதற்காக வைகோ மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்போவதாக திமுக கூறியுள்ளது. தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியின் வழக்கறிஞர்கள் மாநாட்டிற்காக, சனிக்கிழமையன்று திருச்சி வந்த வைகோவிடம், இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வைகோ, இதுதொடர்பாக தனக்கு வெள்ளிக்கிழமை இரவு தாக்கீது கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், தன் மீது வழக்கு தொடர்ந்திருப்பதற்காக மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

“ஏற்கெனவே 2006 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தேன்; அப்போதும் என் மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு போட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராமல் வழக்கை இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறார்கள்; அதேபோல் `ஈழத்தில் நடப்பது என்ன?’ என்று பேசியதற்காக அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியால் என் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது; 124ஏ- பிரிவின் கீழ் வழக்கு போட்டிருப்பதால் சட்டத்தின்படி எனக்கு ஆயுள் தண்டனைகூட கிடைக்கலாம்; இந்த வழக்கில் சாட்சிகள் கூட விசாரிக்கப்பட்டு விட்டன; ஆனால், ஒரு போதும் நான் சொன்ன வார்த்தையை திரும்பப் பெறமாட்டேன்; அவர்கள் என் மீது தொடர்ந்த வழக்கால் நான் அஞ்சப் போவதில்லை; தற்போது எனக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியது திமுக தலைவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; அவர் வழக்கு போட நினைத்திருக்கமாட்டார்; மதிமுகவைச் சேர்ந்தவர்களை சீட் தருகிறேன்; பணம் தருகிறேன் என்று கூறி திமுகவில் சேர்த்துக் கொண்டனர்; இவை அனைத்தும் கருணாநிதிக்குத் தெரியாமல் நடக்கிறதா? என்று நான் கேட்ட மூன்று நாட்களுக்குப் பிறகுதான் `எனக்குத் தெரியாமல் திமுகவில் எதுவும் நடக்காது’ என்று கருணாநிதியை சொல்ல வைத்தார்கள்; தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டைத் தெரிவிக்கிறேன்; 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பின்னணியில் இருந்தது ஸ்டாலின் தான். வேண்டுமானால் இதற்கும் ஸ்டாலின் என் மீது மற்றொரு வழக்கு போடட்டும். 2ஜி வழக்கில் கனிமொழி பலி ஆடு ஆக்கப்பட்டிருகிறார்; கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கருணாநிதி குடும்பத்தினர் திரைமறைவில் பதுங்கிக் கொண்டுள்ளனர்.

ஷாகித் பால்வா சென்னை வந்து மு.க.ஸ்டாலினைச் சந்தித்தபோது என்னபரிமாற்றம் நடந்தது? கோடிக்கணக்கில் வழங்கப்பட்ட டி.டி. யாரிடம் கொடுக்கப்பட்டது; ஷாகித் பால்வா – ஸ்டாலின் சந்திப்பை சிபிஐயிடம் சொன்ன பெரம்பலூர் சாதிக்பாட்ஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார்; சாதிக் பாட்ஷா மரணத்தின் பின்னணி என்ன என்பது குறித்து உண்மை நிலையை சிபிஐ தீவிரமாக விசாரிக்க வேண்டும் என பிரதமரை வலியுறுத்தி உள்ளேன். சாதிக் பாட்ஷா தற்கொலைக்கு திமுகதான் காரணம் என குற்றம் சாட்டுகிறேன்; இதற்கு என் மீது வழக்கு போட வக்கில்லாத திமுக பொருளாளர் ஸ்டாலின், தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக பேரம் நடத்தியது என்று நாளிதழ்களில் வந்த செய்தியைக் குறிப்பிட்டுப் பேசியதைக் காரணம் காட்டி எனக்கு வழக்குரைஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்;

அதையும் நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.இவ்வாறு வைகோ தனது பேட்டியில் குறிப்பிட்டார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பேட்டியின் போது உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: