தேனி, மார்ச் 27-
வருசநாடு அருகே பழிக்குப் பழியாக வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
வாலிப்பாறையைச் சேர்ந்தவர் அர்ச்சுணன் (25) இவரது தங்கையை அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (34) என்பவர் கடந்த மாதம் கேலி செய்தாராம். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுச் சங்கரின் கையை அர்ச்சுணன் வெட்டியுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுக் கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஜாமீனில் வந்துள்ளார்.
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை அர்ச்சுணன் தமது தோட்டத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது மறைந்திருந்த சங்கரின் சகோதரர்கள் இளையராஜா (25), சங்கிலி (32), முருகன் (40), தங்கை நந்தினி (21) அவரது கணவர் பாலமுருகன் (29) மற்றும் செல்வம் (42), சங்கர் (34) ஆகியோர் கொண்ட கும்பல் அர்சுணனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அர்ச்சுணன் சம்பவ இடத்திலே பலியானார்.
இது குறித்து அர்சுணனின் தங்கை இந்திராணி வருசநாடு காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இளையராஜா, சங்கிலி, முருகன் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நான்குபேரை தேடிவருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.