அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தல் களத்தில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கவுகாத்தி தொகுதியில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் சங்கீதா தாசுக்கு ஆதரவாக மாணவர் பட்டாளம் களத்தில் இறங்கியுள்ளது. நகர் முழுவதும் வீடு வீடாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வாக்காளர்களை நேரில் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு காட்சி…

கவுகாத்தி, மார்ச் 26 –

அஸ்ஸாம் சட்டசபைக்கான தேர்தல் பிரச்சாரத்தில் யார் கண்களுக்கும் தெரியாமல் மறைமுகமாக ஐஐடியிலிருந்து மாணவர் மற்றும் தொழில்நுட்பனர்களை கொண்டு சமூக வலைதளம் மற்றும் ஊடகங்களில் பாஜக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தருண்கோகய் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. எதிர்வரும் மாநில சட்டசபை தேர்தலில் வாக்களிப்பின் மூலம் யார் ஆட்சி அதிகாரத்தை பெறப் போகிறார்கள் என்பது கணிக்க முடியாத சூழலாகவே உள்ளது.அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 65 தொகுதிகளுக்கு ஏப்ரல் 4ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி 61 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 19ல் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.

ஒவ்வொரு கட்சியும் மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான வகையில் தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகின்றன. தருண்கோகய் அரசின் மீது அதிருப்திகள் நிலவி வரும் சூழலில் பலமுனை போட்டி உருவாக்கியுள்ளது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைமையிலான அணி, பாஜக-அஸ்ஸாம் கண பரிசத் கூட்டணி, இடதுசாரிகள் அணி என பலமுனைப் போட்டி நிலவுகிறது.இந்நிலையில் பாஜக எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற முனைப்பில் இருக்கிறது. அதற்காக பல மேஜிக் வேலைகளில் பாஜக இறங்கியுள்ளது. கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 78 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அப்போது பாஜக 5 எம்எல்ஏக்களைதான் பெற முடிந்தது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 7 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது ஆட்சிக்கட்டிலில் ஏறிவிடலாம் என பலவழிகளிலும் முயன்று வருகிறது. அஸ்ஸாமைப் பொறுத்தவரை 40 தொகுதிகளில் முஸ்லிம் மக்கள்தான் தீர்மானிக்கும் சக்திகள். இந்த நாற்பது தொகுதிகளில் ஒன்றுகூட பாஜகவிற்கு கிடைக்காது. எஞ்சிய தொகுதிகளில் 63 இடங்களில் வெற்றிபெற்றால்தான் பெரும்பான்மை பெறமுடியும். காங்கிரஸ் அதிருப்தியாளர்களையும் அஸ்ஸாம் கணபரிஷத் உள்ளிட்ட மாநில கட்சிகளின் தலைவர்களையும் வளைத்துபோட முயற்சிகள் நடைபெறுகின்றன. இதனால் அஸ்ஸாம் கணபரிசத் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜகவிற்கு போதுமான அடித்தளம் இல்லையென்றாலும் பல விதமான பேரங்களை நடத்தியும் குறுக்கு வழிகளைக் கையாண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என பாஜகவினர் கருதுகிறார்கள்.`அர்த்த சாஸ்திரா’ என்ற அமைப்பை உருவாக்கியவரான ராஜாத்செத்தி தலைமையில் ஆசிஸ்சோகனி, மகேந்திரசுக்லா, அசீஸ் மிஸ்ரா மற்றும் இளம் பாஜக செயல்பாட்டாளரான அப்ரஸ்த்தா ஆகியோர் கடந்தாண்டு பீகார் தேர்தலுக்கு பின்னர், கடந்த செப்டம்பர் 2015 ல் நடைபெற்ற கூட்டத்தில் அஸ்ஸாம் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான திட்டம் உருவாக்கப்பட்டதாக பாஜகவின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் கூறினார்.

இந்த குழு பெரிய ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்கள் திரட்டியதோடு மக்களை சந்தித்து மக்களின் மனநிலையை மாற்றுவதற்கான அறுவை சிகிச்சையை நாங்கள் துவங்கிவிட்டோம் எனவும் கூறியுள்ளார். பாஜகவின் தேர்தல் பிரச்சாரப்பணியானது, காரக்பூர் ஐஐடி மாணவர்களை கொண்ட ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட பிரச்சாரத்தையும் வெளியாட்களையும், விலை பேசப்பட்ட சிறு, சிறு குழுக்களையும் நம்பியே பாஜக இருக்கிறது. இந்த தேர்தலில் தனது கொள்கை மற்றும் சித்தாந்தத்தை வைத்து பாஜகவால் வெற்றிபெற முடியாது. ஆகவே, தேர்தலில் பெரும் தொகையினை பாஜக கீழே இறக்கியுள்ளதோடு, சமூக வலைத்தளங்களில், ஊடகங்களில், கைபேசிகளுக்கு குறுஞ்செய்திகள் மற்றும் இலவச அழைப்பு விளம்பரங்களையும் அனுப்புவது உள்ளிட்ட உத்திகளை மேற்கொண்டுள்ளது.

அஸ்ஸாம், உண்மைகளில் வேலையின்மையும் வறுமையும் பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த மாநிலம் நாட்டின் மிகவும் ஏழ்மையான வறிய மக்கள் உள்ள நான்காவது மாநிலமாக உள்ளது. சுதந்திரம் பெற்றதிலிருந்து சமூக பொருளாதார வளர்ச்சியில் மேலிருந்து கீழாக சரிந்துள்ளது.தொடர்ந்து இனக்கலவரம் நடைபெற்று வருகின்ற மாநிலமாக அஸ்ஸாம் உள்ளது. போடோ பழங்குடியின மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்களும் அதிகரித்துள்ளன. வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக புலம் பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த மக்களின் பிரச்சனை பெரிதுபடுத்தப்படுகிறது. அஸ்ஸாம் மக்கள்தொகை மாற்றம் குறித்து பாஜகவும் இந்துத்துவ சக்திகளும் அவதூறு பரப்புகின்றன. இந்த புலம் பெயர்வு இன்று நேற்று ஏற்பட்டதல்ல, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்று. தேயிலை சாகுபடிக்காக வங்கதேசத்திலிருந்தும் பிற பகுதியிலிருந்தும் ஆசை காட்டியும் கட்டாயமாகவும் கொண்டு வரப்பட்டவர்கள்.

இதுதவிர இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் வணிக நோக்குடன் ராஜஸ்தானிகள், மார்வாரிகள், பஞ்சாபிகள் முதலானோரும் இங்கு வந்து அப்படியே தங்கிவிட்டனர். இதெல்லாம் நீண்ட காலகட்டத்தில் படிப்படியாக நடந்தது. சமீப காலத்தில் நடைபெற்ற புலப்பெயர்வு என்பது 1947 பிரிவினையின்போதும் 1971 வங்கதேச விடுதலைப் போரின் போதும் ஏற்பட்டதுதான். ஆனால் இந்த வரலாற்றைத் திரித்து, அந்நிய ஊடுருவல் என்கிற அரசியல் சொல்லாடலை வைத்து முஸ்லிம் மக்களை அந்நியப்படுத்தி பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. முஸ்லிம் வெறுப்பை பரப்புவதையும் இந்த புலம் பெயர்வு தேச பாதுகாப்பிற்கே ஆபத்து என்றும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறது பாஜக.புலம் பெயர் மக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும்முக்கியத்துவமும் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தாலும், இந்த தேர்தலில் முஸ்லிம் மக்களுக்கு பெரும் அச்ச உணர்வையும் உருவாக்கியுள்ளது. முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் பாஜக காங்கிரஸ் ரகசிய உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.

எனவே, என்னதான் பல்வேறு பிரச்சனைகள் பேசப்பட்டாலும், புலம் பெயர் மக்களின் பிரச்சனை அஸ்ஸாம் மாநில தேர்தலில் பெரியதாக உருவெடுத்து வருகிறது. மக்களை பிளவுப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்கிறது. இதற்கு அஸ்ஸாம் மக்கள் பலத்த அடி கொடுப்பார்கள்

Leave a Reply

You must be logged in to post a comment.