கரூர், மார்ச் 27–

கரூர் அருகே உள்ள ராமா கவுண்டன்புதூரை சேர்ந்தவர் சுரேஷ் ஆரோக்கிய சாமி (28). சனிக்கிழமை இவர் கரூர் – ஈரோடு சாலையில் ஆத்தூர் பிரிவு அருகே நண்பர்கள் 2 பேருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் பைக்கில் 4 பேர் வந்தனர். கையில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த அவர்கள், அங்கு நின்று கொண்டிருந்த சுரேஷ் ஆரோக்கியசாமியை சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுரேஷ் ஆரோக்கியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை நடந்த சில மணி நேரங்களில் ஒரு வாலிபர், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் சுரேஷ் ஆரோக்கியசாமியை நான் தான் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது கொலை செய்யப்பட்ட சுரேஷ் ஆரோக்கியசாமி எனது தங்கையை கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார்.

அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எனது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி சுரேஷ் ஆரோக்கியசாமி எனது தங்கையை திருமணம் செய்து கொண்டார். அவர் மீதுள்ள ஆத்திரத்தில் கொலை செய்தேன் என்றும் கூறியுள்ளார்.

சுரேஷ் ஆரோக்கியசாமிக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. அதன்பிறகு அந்த பெண்ணை சுரேஷ் ஆரோக்கிய சாமியிடம் இருந்து பிரித்து வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர். இதனால் சுரேஷ் ஆரோக்கியசாமி மனைவியை கண்டுபிடித்து ஒப்படைக்க கோரி மதுரை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆஜராக வந்த அந்த பெண்ணிடம், சுரேஷ் ஆரோக்கியசாமி தன்னுடன் சேர்ந்து வாழ வரும்படி கூறினார். ஆனால் அந்த பெண் சுரேஷ் ஆரோக்கியசாமியிடம் செல்ல மறுத்து தனது பெற்றோருடன் வாழ விரும்புவதாக கூறிவிட்டார். ஆனாலும் சுரேஷ் ஆரோக்கியசாமி காதல் மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்வதில் குறியாக இருந்தார். இந்நிலையில் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே சுரேஷ் ஆரோக்கியசாமியை கொலை செய்தது பெண்ணின் உறவினர்தானா? அல்லது வேறு யாராவது அவரை கொலை செய்துவிட்டு பழியை அவர்கள் மீது போட திட்டமிட்டார்களா? என்ற குழப்பமும் காவல் துறையினருக்கு எழுந்துள்ளது. போனில் பேசிய வாலிபர் விரைவில் நீதிம்ன்றத்தில் சரணடைவதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அவர் பிடிபட்டால்தான் இந்த கொலைக்கான முழு காரணமும் தெரியவரும். சுரேஷ் ஆரோக்கியசாமியை கொலை செய்த கொலையாளிகளின் உருவம் அங்குள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து காமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை காவல் துரையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரர் சிவநேசன் உள்பட 4 பேர் மீது கரூர் டவுன் காவல் துரையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர். உடுமலைப்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்த பொறியியல் மாணவர் சங்கர், அவரது காதல் மனைவி கவுசல்யா கண் எதிரிலேயே ஆணவக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் கரூரில் சுரேஷ் ஆரோக்கியசாமி கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.