திருவண்ணாமலை,மார்ச் 26-
திருவண்ணாமலையில், மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி செய்ததுடன், தங்களை விலைக்கு விற்ற டிராவல்ஸ் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, திருவண்ணாமலை, கோரிமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் நசீர்பாஷா (41). திருவண்ணாமலை, தாமரை நகரைச் சேர்ந்தவர் சாதிக்பாஷா (46). தையல் தொழிலாளிகளான இருவரும் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல திட்டமிட்டனர்.  இதையடுத்து, திருவண்ணாமலையில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகினர். டிராவல்ஸ் நிறுவனத்தினர் இருவரையும் மலேசியாவுக்கு அனுப்ப தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.ஒரு லட்சம் பணம் பெற்றுக் கொண்டு, கடந்த பிப்ரவரி 21 ந்  தேதி இருவரையும் மலேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரே மாதத்தில் திரும்பி வந்த நசீர் பாஷா, சாதிக்பாஷா ஆகியோர் வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், டிராவல்ஸ் நிறுவனத்தினர் எங்களை வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, வெளிநாட்டு நிறுவனத்திடம் விற்று விட்டனர். எங்களை விலைக்கு வாங்கியவர்கள் ஒரு வீட்டின் அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். இதுகுறித்து, எங்கள் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தோம். இதையடுத்து, மலேசியாவில் உள்ள உறவினர்கள் மூலம் ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரம் பணம் அளித்துவிட்டு, தப்பி வந்தோம். மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி எங்களை வெளிநாட்டில் விற்ற திருவண்ணாமலை டிராவல்ஸ் ஏஜென்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: