index 1ஹைதராபாத், மார்ச் 26-
ஜேஎன்யு மாணவர்கள் – ஆசிரியர்கள் போன்று ஒன்றுபட்டுப் போராடுவோம், மனுவாதி அப்பாராவின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவோம் என்று ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கே.பி. சுஹைல் அறைகூவல் விடுத்தார்.
ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக வளாகத்திற்குள் துணைவேந்தர் பி. அப்பாராவ் கைது செய்யப்பட வேண்டும் என்றும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களும், ஆசிரியர்களும் நிபந்தனை எதுவுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வளாகத்திற்குள்ளேயே மாணவர்கள் போராடி வருகின்றனர். இவர்கள் மத்தியில் மாணவர் சங்கத் தலைவர் கே.பி. சுஹைல் பேசுவது யு-ட்யூப் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் அவர் பேசுவதாவது:
“ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக வளாகத்திற்குள் தெலுங்கானா காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து, மாணவர்களையும் ஆசிரியர்களையும் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் அடித்து நொறுக்கியுள்ளனர். ஆசிரியர் ரத்னம் வாயிலிருந்து ரத்தம் வருவதை நான் பார்த்தேன்.

வளாகத்திற்குள் நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைக் கேட்டறிந்து வழக்குரைஞர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் நம்மைப் பார்ப்பதற்காக ஓடோடி வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எவரும்  உள்ளேவர அனுமதிக்கப்படவில்லை. ஏன் என்று நாம் கேட்டால், அவர்கள் வெளியாட்கள், எனவே அவர்களுக்கு அனுமதி கிடையாது என்கிறார்கள்.
அவர்கள் வெளியாட்கள் என்றால், எங்களை அடித்து நொறுக்கிய காவல்துறையினர் யார்? பதிவாளரின் நண்பர் உள்ளே வரலாம், துணை வேந்தரின் நண்பர் உள்ளே வரலாம். வழக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளே வரக்கூடாதா?
சம்பவங்கள் குறித்து கேள்விப்பட்டு பல மாணவர்களின் பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் எவரையும் உள்ளே விடவில்லை.  மாறாக காவல்துறையினர் பல்கலைக் கழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுதந்திரமாக திரிவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மாணவர்களே, ஆசிரியர்களே! இங்கே நடக்கும் விஷயங்களை நன்கு சிந்தித்துப் பாருங்கள். நன்கு சிந்தித்து எதேச்சதிகார முறையில் நடந்துகொள்ளும் துணை வேந்தருக்கு எதிராகவும், நிர்வாகத்திற்கு எதிராகவும் ஜனநாயக முறையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முன்வாருங்கள்.

நம் பல்கலைக்கழக மாணவர்கள் 25 பேர், ஆசிரியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட வேண்டும். ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணமான துணை வேந்தர் பி.அப்பாராவ் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும், அவர் கைது செய்யப்பட வேண்டும்.
நம் பல்கலைக் கழகத்தில் இன்னும் சில ஆசிரியர்கள் நம் போராட்டத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளத் தயங்கிக் கொண்டு மவுனம் கடைப்பிடித்து வருகிறார்கள். நல்லவர்களின் மவுனம், கெட்டவர்களின் சத்தத்தைவிட மோசமானதாகும். எப்படி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் சமுதாயமும், ஆசிரியர் சமுதாயமும் ஒன்றுபட்டு நின்று இந்த இந்து மனுவாதி அரசின் கொள்கைகளை எதிர்த்து முறியடித்து வெற்றிபெற்றார்களோ, அதேபோன்று இங்கேயும் நாம் வெற்றி பெற அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் ஒன்றுபடுவோம், போராடுவோம்.

நாம் அம்பேத்கரின் பாரம்பரியத்தில் வந்தவர்கள், நாம் பகத்சிங்கின் பாரம்பரியத்தில் வந்தவர்கள், மனுவாதிகளின் எதேச்சதிகார அடக்குமுறைகளுக்கு அடிபணிய மாட்டோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை எங்கள் போராட்டம் தொடரும்.’’
இவ்வாறு சுஹைல் பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: