மாமல்லபுரம். மார்ச் 26-

இந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலாத் இடங்களை சுற்றி பார்க்கவும், இங்குள்ள பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கவும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வருகின்றனர். அப்படி வரும் ஒரு சில வெளிநாட்டினர் பல நேரங்களில் பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் மற்ற சுற்றுலா பயணிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மற்ற வெளிநாட்டினருக்கு தேவையான உதவிகளை செய்ய போதிய தகவல் தொழில்நுட்ப வசதி இல்லாத நிலை உள்ளது. மேலும் தவறு செய்யும் வெளிநாட்டினர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இதுபோன்ற பிரச்சனைகளைத் தீர்க்க, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசின் குடியேற்றத் துறை (இமிக்ரேஷன்) சார்பில் படிவம் சி, படிவம் எஸ் ஆகிய 2 படிவங்கள் புதிய சாப்ட்வேர் மூலம் உருவாக்கப்பட்டது.

அதன்படி வெளிநாட்டில் இருந்து சுற்றுலா, மருத்துவம், வேலை, பயிற்சி போன்ற காரணங்களுக்காக வரும் வெளிநாட்டினர், தாங்கள் தங்கும் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் ‘சி’ படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

அந்த படிவத்தை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, இங்கு வெளிநாட்டினர் தங்குவதற்கு அனுமதி அளிப்பர். அதன்படி அந்த நபருக்கு என தனி யூனிக்கேஸ் பைல் (யூசிஎப்), யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு உருவாக்கப்பட்டு அவர் திரும்பிச் செல்லும் வரை அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும்.

வெளிநாட்டு மாணவர்கள் ‘எஸ்’ படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் அனுப்ப வேண்டும். அவர் கல்லூரி படிப்பை முடித்ததும் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டாரா அல்லது இங்கே சட்ட விரோதமாக தங்கி உள்ளாரா என்பது இதன் மூலம் தெரிந்து விடும். தற்போது இந்த 2 படிவங்களையும் ஓட்டல்கள், தனியார் வீட்டு உரிமையாளர்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்து பாஸ்போர்ட், விசா நகலுடன் அதற்குரிய வெப்சைட்டில் அனுப்பும் வகையில் சாப்ட்வேர் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, அந்தந்த கல்லூரி நிர்வாகம் ஆன்லைனில் படிவத்தை அனுப்ப வேண்டும். அந்த படிவத்தை பூர்த்தி செய்யாமல் வெளிநாட்டினரை விடுதிகளில் தங்க வைத்தால், வெளிநாட்டினர் சட்டம் 1946ன் கீழ் குற்றமாக கருதப்பட்டு, அவர்களுக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்க வழிவகுக்கும் என்ற புதிய நடைமுறை வகுக்கப்பட்டு உள்ளது.
இந்த சட்டம் மற்றும் 2 படிவங்களை பூர்த்தி செய்வது குறித்து, மாமல்லபுரத்தில் தனியார் நட்சத்திர ஓட்டல்கள், தனியார் விடுதிகள், கல்லூரி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேசிய தகவலியல் மைய விஞ்ஞானி குப்புசாமி, காஞ்சிபுரம் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி ஆரோக்கிய பிரகாசம், மாமல்லபுரம் டிஎஸ்பி சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.