திருவண்ணாமலை, மார்ச் 26-
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செய்யாறு வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் ஈடுபட்ட விவசாயிகள் அறுவடைகாலங்களில் அதிக லாபமடைந்து மகிழ்ச்சியில் திளைத்த காலங்கள் கடந்துவிட்டது.
நெல் உற்பத்திக்கு செலவிடும் பணத்தை காட்டிலும், அந்த நெல்லை அறுவடை செய்து விற்பனை செய்ய முயன்றால் செலவழித்த பணம் கூட கிடைப்பதில்லை. நெல் சாகுபடி என்பது நட்டத்தில் தான் முடியும் என்பதை கிடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் கூறிவருகின்றனர்.   திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. பொது ரக நெல்லுக்கு ஆதார விலையாக ரூ.1410 ம், ஊக்கத்தொகையாக ரூ.50 -ம் வழங்கப்படுகிறது.
ஆனால், மற்றபகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.600, 650, 700 என்கிற விலைக்கே விற்பனையாகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தனியார் கமிஷன் மண்டிகளில் சென்று நெல்லை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆரணி, செய்யாறு பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கடந்த சில வாரங்களாக நெல்வரத்து அதிகமாக உள்ளது. தினந்தோறும் சுமார் 5  ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் விலை குறைவாக உள்ளதாக குற்றசாட்டு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதேபோல் செய்யாறு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிக அளவு நெல் மூட்டைகள் வருகிறது.  இந்த நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் எடை போட்டு அடுக்கி வைப்பது வழக்கம்.
கடந்த வாரத்தில் இருந்து அதிக நெல்வரத்து காரணமாக வெள்ளிக்கிழமை முதல், நெல் மூட்டைகள் எடை போடப்படாமல் அப்படியே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், ஏற்கெனவே வந்து எடைபோடப்படாமல் காத்திருக்கும், நெல் மூட்டைகளை எடை போடாமல்,  புதிதாக வந்த நெல் மூட்டைகளை பணம் வாங்கிக் கொண்டு தொழிலாளர்கள் எடை போட்டதாகக் கூறப்படுகிறது.. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் செய்யாறு – ஆற்காடு சாலையில்  மறியல் போராட்டம் நடத்தினர்.  இந்த நெல்விற்பனை தொடர்பாக, உதாரணமாக செங்கம் வட்டத்தில் புதுப்பாளையத்தில் மட்டுமே நேரடி கொள்முதல் நிலையம் உள்ளது. எனவே, செங்கம் சற்றுவட்டார பகுதி விவசாயிகள் நெல் விற்பனை செய்ய தவிப்புகுள்ளாகும் நிலை உள்ளது.  எனவே, மாவட்ட நிர்வாகம் நெல் அதிகமாக உற்பத்தியாகும் பகுதிகளில் கூடுதலாக நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்பது மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
 (கோப்பு புகைப்படம்)

Leave a Reply

You must be logged in to post a comment.