கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளார். இதன்மூலம் 6.5 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்துக்கு மீண்டும் முன்னேறியுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது. அதில் நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதவுள்ள வீரரை தேர்வு செய்வதற்காக கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி நடத்தப்படுகிறது. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், உலக செஸ் போட்டியில் கார்ல்சனை எதிர்கொள்வார்.
வியாழக்கிழம் நடந்த 11வது சுற்றில், போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி முதலிடத்தில் இருக்கும் செர்ஜி கர்ஜாகினை விஸ்வநாதன் ஆனந்த் எதிர்கொண்டார். ஏற்கெனவே இதற்கு முந்தைய சுற்றில் ஆனந்த் தோற்றுப் போயிருந்ததால் இந்தச் சுற்று மிகமுக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆனந்த் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கியது அவருடைய ஆட்டத்தின் போது வெளிப்பட்டது. நிச்சயம் சமநிலை ஆகும் என்று கருதப்பட்ட இந்தச் சுற்றின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று போட்டியை மேலும் பரபரப்பு ஆக்கியுள்ளார் ஆனந்த்.
11 சுற்றுகளில் 6.5 புள்ளிகள் பெற்று கருணாவுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார் ஆனந்த். கர்ஜாகின் 6 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். 5.5 புள்ளிகளுடன் 3 பேர் 3வது இடத்தை பிடித்துள்ளனர். மீதமுள்ள 3 சுற்றுகளில் இந்தப் போட்டி மேலும் பரபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் வேண்டுனாமாலும் ஜெயிக்கலாம் என்கின்ற நிலையே இப்போதும் நீடிக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.