தியாகி பகத்சிங் நகர், மார்ச் 25-

பகத்சிங் கண்ட சோசலிசக் கனவை நனவாக்கிட உறுதியேற்போம் என்று மார்ச் 23 அன்று பகத்சிங் பிறந்த மண்ணில் நடைபெற்ற கூட்டத்தில் இடதுசாரிக் கட்சிகள் உறுதி எடுத்துக் கொண்டன.

பஞ்சாப் மாநிலத்தில் இயங்கும் இடதுசாரிக் கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (பஞ்சாப்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) ஆகியவை இணைந்து தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப் பட்ட 86ஆவது நினைவுநாளை மிகவும் எழுச்சியுடன் பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலன் என்னும் தியாகி பகத்சிங் நகரில் நடத்தின.  இம்மாநாட்டில்  பெண்கள் உட்பட ஏராளமானோர கலந்து கொண்டனர்.

மாநாட்டில் உரையாற்றிய பந்த் சிங் பிரார், சரண் சிங் விர்தி, விஜய் மிஷ்ரா, மங்கத் ராம் பஸ்லா, குர்மித் சிங் பக்துபூர், பூபிந்தர் சம்பர், பல்வீர் சிங் ஜட்லா ஆகிய அனைவருமே தியாகிகளுக்கு புகழஞ்சலியை செலுத்தியபின்னர், மக்கள் மத்தியில் ஆளும் மோடி அரசாங்கத்தின் மீதும், மாநிலத்தில் ஆளும் பாஜக-அகாலிதள அரசாங்கத்தின்மீதும் விரக்தி அடைந்திருப்பதை எடுத்துரைத்தனர்.

மேலும் ஆட்சியாளர்கள் மேற்கொண்டுவரும் பாசிஸ்ட் மதவெறி நடவடிக்கைகளையும் கண்டித்தனர். விடுதலைப் போராட்டத்தில் துரும்பைக்கூட கிள்ளிப் போடாத, மூவர்ணக் கொடியை கடந்த 53 ஆண்டுகளாக அங்கீகரிக்காத  ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் பரிவாரங்களும் இப்போது நமக்கு நாட்டுப்பற்று குறித்து சான்றிதழ் வழங்க முயற்சித்துக் கொண்டிருப்பதையும் கண்டித்தனர்.

பின்னர்  இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பெரோஸ்பூர் அருகில் ஹுசைனிவாலா என்னுமிடத்தில் அமைந்துள்ள தியாகிகள் பகத்சிங் – ராஜகுரு – சுகதேவ் நினைவிடத்திற்குப் பேரணியாகச் சென்று, தியாகிகளின் சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்திடுவோம் என்றும், ஆர்எஸ்எஸ்-உம் அதன் பரிவாரங்களும் கட்டவிழ்த்துவிட்டுள்ள பிளவுவாத மற்றும் பாசிஸ்ட்  மதவெறி, சாதி வெறி, பிராந்திய வெறி நிகழ்ச்சிநிரலை எதிர்த்து முறியடிப்போம் என்றும், உறுதி எடுத்துக் கொண்டனர்.

அங்கே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தலைவர்கள் கல்வி வணிகமயமாகி வருதல், வேலையின்மை, கறுப்புப்பணம், ஊழல், போதைக்கு இளைஞர்கள் ஆளாகி வருதல், கல்வி நிறுவனங்கள் காவியமாகி வருதல், மக்களின் அரசமைப்புச்சட்ட உரிமைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருதல் ஆகியவற்றை விளக்கினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், பஞ்சாப் சிஐடியு மாநில பொதுச் செயலாளருமான  ரகுநாத் சிங் பேசுகையில், மாபெரும் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது, மனிதனை மனிதன் சுரண்டாத ஒரு சோசலிச அமைப்பை இம்மண்ணில் நிறுவுவதற்காக அவர்கள் உயர்த்திப்பிடித்த தத்துவ வெளிச்சத்தில் முன்னேறிச் செல்வதே என்றார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.