மும்பை, மார்ச் 25-

அமெரிக்காவில் சிவசேனாவுக்கு நிதிதிரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளியான டேவிட் ஹெட்லி வெள்ளிக்கிழமை வாக்குமூலம் அளித்துள்ளான். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 166 பேர் பலியான வழக்கு தொடர்பான விசாரணையில் அப்ரூவராக மாறி, அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் மும்பை நீதிமன்றத்தில் தொடர்ந்து வாக்குமூலம் அளித்து வருகிறார்.

அவ்வகையில், மும்பை தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றச் சிறப்பு நீதிபதி ஜி.ஏ.சனாப் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வீடியோ கான்பிரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்த டேவிட் ஹெட்லி, அபுஜுண்டாலின் வழக்கறிஞர் நடத்திய குறுக்கு விசாரணையின்போது கூறியதாவது, அமெரிக்காவில் சிவசேனா கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த நிகழ்ச்சியில் சிவசேனா தலைவர் பால்தாக்ரே பங்கேற்க மாட்டார், அவரது சார்பாக அவரது மகன் கலந்து கொள்வார் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நான் மேற்கொண்டு எந்தத் தகவலையும் அறிந்துகொள்ள முயற்சிக்கவில்லை என்று கூறினார்.
வியாழக்கிழமை வாக்குமூலத்தின்போது சிவசேனா தலைவர் பால் தாக்ரே தீர்த்துக்கட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தால் நியமிக்கப்பட்ட கொலையாளி காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்டதால் அந்தத் திட்டம் நிறைவேறாமல் போனதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மீதான தனது வெறுப்புணர்வுக்கு வெள்ளிக்கிழமை காரணம் கூறிய ஹெட்லி, 1971ம் ஆண்டு நான் படித்துக்கொண்டிருந்த பள்ளிக் கூடத்தின் மீது இந்தியப் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. அதிலிருந்து இந்தியா மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அந்த வெறுப்பை தீர்த்துக் கொள்ளவே லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் சேர்ந்தேன் என தெரிவித்தான். கடந்த 26-12-2008 அன்று எனது தந்தை இறந்தார். அவரது மறைவுக்கு சில நாட்கள் கழித்து பாகிஸ்தான் (அந்நாள்) பிரதமரான யூசுப் ராசா கிலானி எனது வீட்டுக்கு வந்திருந்தார் எனவும் டேவிட் ஹெட்லி வாக்குமூலம் அளித்தான்.

Leave a Reply

You must be logged in to post a comment.