துணைவேந்தரை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது தடியடி

ஹைதராபாத், மார்ச் 23 –

ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில், ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமார் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்குள் வெளியிலிருந்து வரும் யாரும் நுழையக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு, வளாகத்தைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதுடன், பல்கலைக்கழக வகுப்புக்களும் நான்கு நாட் களுக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளன.ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. படித்து வந்த தலித் மாணவர் ரோஹித்வெமுலா, இப்பல்கலைக்கழகத்தில் நிலவும் சாதியப் பாகுபாட்டிற்கு எதிராக போராடி வந்தார்.

இதனால், அவர் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ‘ஏபிவிபி’-யின் தலைவரை தாக்கியதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, பல் கலைக்கழகத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், பாஜக மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் அளித்த நெருக்கடி காரணமாக பல்கலைக்கழக விடுதியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். இதனால் விரக்தியடைந்த ரோஹித் வெமுலா, கடந்த ஜனவரி மாதம் விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இப்பிரச்சனையில் துணைவேந்தர் அப்பாராவ் எடுத்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளும் வெமுலாவின் தற் கொலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அவர்மீதும், அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர் . ஜனவரி 24-ஆம் தேதி துணைவேந்தர் அப்பாராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். தற்போது 2 மாதங்களுக்குப் பிறகு, செவ்வாயன்று அப்பாராவ் மீண்டும் பணிக்குத் திரும்பினார். இதனால் ஆவேச மடைந்த மாணவர்கள் அப்பாராவை ராஜினாமா செய்யக் கோரி அவரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அங்கு வந்த போலீசார் மாணவர்கள் மீது கொடூரமான முறையில் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். போலீசாரின் இந்த தாக்குதல் மாணவர்களை மேலும் ஆவேசமடையச் செய்த நிலையில், தில்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்யகுமார், புதனன்று ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கன்னய்யகுமார் பேசுவதற்கு துணை வேந்தர் அப்பாராவ் தடை விதித்ததுடன், ஊரடங்கு போல பல்கலைக்கழகத்திற்குள் யாரும் நுழையக் கூடாது என்று உத்தரவிட்டதுடன், பல்கலைக்கழக வகுப்புக்களையும் 4 நாட்களுக்கு ரத்து செய்தார். பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய கன்னய்யகுமார் பத்திரிகை யாளர்களிடையே பேசினார். ரோஹித் போன்ற மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கவும் அவருக்கு நீதி கிடைக்கவும் ரோஹித் சட்டம் கொண்டுவரும் வரை மாணவர்களின் போராட்டம் தொடரும்; நான் ரோஹித்தின் தாயாரையும் அவரின் சகோதரரையும் சந்திப்பேன்; பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் கூட்டு போராட்டக் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது; இந்த கமிட்டிதான் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற எனக்கு அழைப்பு விடுத்திருந்தது;

போலீசார் அனுமதி அளித்தால் நான் நிச்சயம் மாணவர்களிடையே உரையாற்றுவேன் என்று அப்போது கன்னய்ய குமார் கூறினார். தேசத்துரோக வழக்கில் இடைக்கால ஜாமீனில் உள்ள கன்னய்ய குமார், ஹைதராபாத் வந்துள்ள நிலையில், அவர் பிணையின் விதிகளை மீறியிருப்பதாக சர்ச்சையும் கிளப்பப்பட்டு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: