கடலூர், மார்ச்.24-

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற பெயரினை என்.எல்.சி. இந்தியா லிமிடெட் எனப் பெயர் மாற்றம் செய்யும் முயற்சியை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெய்வேலி நகர கமிட்டிக் கூட்டம், நெய்வேலி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஆர்.மணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.முத்துவேல், நகரச் செயலாளர் எஸ்.திருஅரசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.மீனாட்சிநாதன், ஜி.குப்புசாமி, ஏ.வேல்முருகன், ஜெ.ஜெயராமன், நகர கமிட்டி உறுப்பினர்கள் எம்.சீனுவாசன், பி.மணிமாறன், எம்.சுந்தர், எம்.அன்பழகன், எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். பி.எஃப் உள்ளிட்ட சிறு சேமிப்புகளுக்கு வட்டியை குறைத்த மத்திய அரசுக்கு கண்டனம், சுரங்கத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு,  பறிக்கப்பட்ட தொழிலாளர்களின் சி-ஆஃப், பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகளை திரும்ப அளிக்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்டு பின்னர் பணியமர்த்தப்பட்ட 11 தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த-சொசைட்டி தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் உத்திரவுப்படி ஊதியமும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணி நிரந்தரமும் செய்ய வேண்டும், நிறுவனத்துக்கு நிலம், வீடு வழங்கியவர்களுக்கு மாற்று இடம் மற்றும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். கொலை, கொள்ளைகளைத் தடுத்திட நெய்வேலி நகரிய பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.