தேமுதிகமக்கள் நலக் கூட்டணி உடன்பாடு

சென்னை, மார்ச் 23 –

தேசிய முற்போக்கு திராவிட கழகம் – மக்கள நலக்கூட்டணி இணைந்து 2016 மே 16ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவு செய்துள்ளன. இதற்கான ஒப்பந்தம் புதனன்று (மார்ச் 23) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கையெழுத்தானது.

இதனையடுத்து தேமுதிக அலுவலக வாயிலில் தேமுதிகவினர் வெடிவெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இச்செய்தியறிந்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர், மக்கள் நலக்கூட்டணி கட்சிகளின் சார்பில் வெடி வெடித்து கொண்டாடினர்.

தொகுதி உடன்பாடு விவரம்                                                                            

2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்ணியின் ஒருங்கிணைப்பாளரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளருமான வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த உடன்பாட்டில், 16-05-2015 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகமும், மக்கள் நலக்கூட்டணியும் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு, தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை தமிழக முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திப்பதென்றும், தேமுதிக 124 தொகுதிகளில் போட்டியிடுவதென்றம், மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளில் போட்டியிடுவதென்றும் உடன்பாடு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. தொகுதி உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தேமுதிக அலுவலகத்தில் எழுச்சியுடன் பெருந்திரளாக திரண்டிருந்த தொண்டர்களிடையே உரையாற்றிய தலைவர்கள் கூறியதாவது.

முத்தரசன்

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சிகள் மாறிமாறி வருவதை தடுக்க பகத்சிங் நினைவு நாளான இன்று சபதமேற்போம். 2016 சட்டமன்ற தேர்தல் ஒரு அரசியல் யுத்தம். அந்தப்போர் மகாபாரதப்போர் போன்று இருக்கும். அந்தப்போரில் பஞ்சபாண்டவர்கள்தான் வெற்றி பெற்றார்கள். இந்தப் போரிலும் பஞ்சபாண்டவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.

தேர்தல் களம் தயராகி விட்டது. மிக சூடாக இருக்கும். நாம்தான் வெற்றிபெறுவோம். திமுக, அதிமுகவுக்கு மாற்றுத்தேவை என்ற கனவு நிறைவேறும் நல்லச்சூழல் உருவாகி இருக்கிறது.

பாலில் பழம் நழுவி விழும் என்றார் ஒருவர். பழம் விஷப்பாலில் விழக்கூடாது என்றார் வைகோ. அவர் குருவை மிஞ்சிய சிஷ்யனாக இருக்கிறார். அதிமுக இப்போதுதான் யுத்தத்தை தொடங்கியுள்ளது. வைகோவை விமர்சித்து அவர்கள் நாளேட்டில் எழுத தொடங்கியுள்னர். திமுக, அதிமுக இரண்டு தீய சக்திகளையும் வீழ்த்தி மகத்தான வெற்றி பெறும். தமிழக மக்களின் கனவை நிறைவேற்றும் என்றார்.

திருமாவளவன்

தேமுதிக இப்படி ஒரு முடிவை எடுக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த 3 மாதகாலமாக விஜயகாந்த் மீது பலர் களங்கத்தை கற்பித்தார்கள். மள உளைச்சலை தரும் அளவிற்கு தேமுதிகவிற்கு எதிராக என்னவெல்லாம் எழுதமுடியோ அவ்வளவு அவதூறுகளை எழுதினார்கள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த முடிவால் பல அவதூறுகளை விஜயகாந்த் தவிடுபொடியாக்கி உள்ளார்.

கயிறு இழுக்கும் போட்டியைப் போல் இப்போது நடந்துள்ளது. திமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணி இவர்களில் யார்பக்கம் விஜயகாந்த் போவார் என விவாதிக்கப்பட்டது. மக்கள் பக்கம்தான் நிற்பார். மககள் நலக்கூட்டணியோடு சேர்ந்துள்ளார். இது யாரும் எதிர்பாராத முடிவு.

காஞ்சிபுரம் வேடல் மாநாட்டில் விஜயகாந்த் கூறியதுபோல் தற்போது அவர் கிங்காக உள்ளார். நாங்கள் நால்வரும் கிங் மேக்கர்களாக இருக்கிறோம். மகளிர் மாநாட்டில் கூறியது போன்று தேமுதிக தலைமையில் மக்கள் நலக்கூட்டணி இடம்பெற்றுள்ளது. ஊசலாட்டம் இல்லாமல், நாளைய தமிழகத்தை பாதுகாக்க இந்த அணிதான் முடிவெடுத்து மக்கள்நலக்கூட்டடணியோடு தேமுதிக உடன்பாடு வைத்துள்ளது. இது பிரேக்கிங் நியூஸ் அல்ல ராக்கிங் நியூஸ். இது அதிர்ச்சி தரும் செய்தி அல்ல; மாபெரும் தாக்கத்தை தரும் செய்தி.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்த அணிக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி. அரசியல் சரித்திரத்தை புரட்டிபோடும் வகையில், 1967ல் நிகழ்ந்தது போன்ற புரட்சிகரமான மாற்றம் 2016லும் நிகழும். மே 20 அல்லது 21ந் தேதி விஜயகாந்த் முதலமைச்சராக பதவியேற்பார் என்றார்.

ஜி. ராமகிருஷ்ணன்

கடந்த டிசம்பர் 23ந் தேதி மக்கள் நலக்கூட்டணித் தலைவர் விஜயகாந்தை சந்தித்து இணைந்து தேர்தலை சந்திக்க அழைப்பு விடுத்தோம். அப்போது விஜயகாந்த், எல்லோரும் வருவார்கள் போவார்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். இன்று (மார்ச் 23) தேதி தமிழக அரசியல் வராற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்.

அண்ணா மறைவுக்கு பிறகு கருணாநிதி 5 முறை முதலமைச்சராக இருந்தார். அதிமுகவும் ஆட்சி அமைத்தது. மாறி மாறி ஆட்சி செய்து எந்த மாற்றமும் நிகழவில்லை. மக்களிடம் வாக்கு வாங்கியவர்கள் தங்களை மட்டுமே வளப்படுத்திக் கொண்டார்களே என்ற ஏக்கம் உருவானது. அதனை நிவர்த்திக்க மக்கள் நலக்கூட்டணி உதயமாகி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தது. இந்த அணி தமிழக அரசியல வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க உள்ளது.

நம்மைபார்த்து ஏளனம் ஏகடியம் பேசினார்கள். அவர்களுக்கு உறுதியாக சொல்கிறோம். தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் திமுக, அதிமுக தோற்கடிக்கப்படும். தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி உடன்பாடு தீயாக மக்களிடத்தில் பரவியுள்ளது. ஆட்சிமாற்றம் நிச்சயம். அதிமுக, திமுகவுக்கு வாக்களித்து வாக்கை வீணாக்காமல் எங்களுக்கு வாக்களியுங்கள்.

வரலாற்று திருப்பத்தை ஏற்படுத்தும் முடிவுவை தேமுதிக எடுததுள்ளது. முக்கிய திருப்புமுனையை உருவாக்கும். 5 கட்சிகளை சேர்ந்த செயல்வீரர்களும் இணைந்து, தமிழக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை உருவாக்குவோம்.

வைகோ

வரலாற்று திருப்பமாக 1967ல் அண்ணா ஆட்சி பொறுப்பேற்றதுபோல் ஒரு நிகழ்வு 2016 தேர்தலில் நிகழ இருக்கிறது. கடந்த டிச 23ந் தேதி வந்து கேப்டன் விஜயகாந்தை சந்தித்து பேசிவிட்டு நம்பிக்கையோடு சென்றோம். நான்கு கட்சிகளும் மனப்பூர்வமாக ஏற்றுதான் முதலமைச்சர வேட்பளராக அறிவித்திருக்கிறோம்.

10 மாதத்திற்கு முன்பு விமானத்தில் பேசிக்கொண்டு வரும்போது மதிமுக, தேமுதிக-வை அழிக்க திமுக முயற்சிக்கிறது என்றேன். அப்போது விஜயகாந்த் சொன்னார், திமுக இனி எழாது. அதிமுக-வை வீழ்த்துவதுதான் ஒரே நோக்கம். அதற்காக எதையும் செய்வேன் என்றார். அதன்படி தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியோடு அணி அமைத்துள்ளார்.

கேப்டன் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். இதற்கு முன்பு இப்படி ஏதாவது ஒரு கட்சி அறிவித்துள்ளதா?  ஊடகவியலாளர்கள், எங்களை அழிக்க நினைத்த அதிமுக, சிதைக்க நினைத்த திமுக உள்ளிட்டோருக்கு கூறிக்கொள்வது திமுக, அதிமுகவை வெற்றி பெற விடமாட்டோம். தேமுதிக-மக்கள் நலக்கூட்டணிக்கு சேனாதிபதியாக இருந்து இந்த படையை வழிநடத்தி வெற்றி பெற வைப்பேன்.

மார்ச் 26ந் தேதி திருச்சியில் நடைபெறும் மக்கள் நலக்கூட்டணி வழக்கறிஞர் மாநாட்டில், தேமுதிக பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். 28, 29, 30ந்தேதி வரை நடைபெறம் மக்கள் நலக்கூட்டணி சார்பில் தென்மாவட்டங்களில் நடைபெறும் 5ம் கட்டபிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவில்பட்டி கூட்டத்தில் சுதீஷ், சந்திரகுமார் பங்கேற்க உள்ளார்கள்.

தேமுதிக மகளிரணி தலைவர் பிரமலதா விஜயகாந்த் மார்ச் 28ந் தேதியில் இருந்து ஏப்ரல் 5ந் தேதி வரை மேற்கொள்ளவிருக்கும் பிரச்சாரத்தில் மக்கள் நலக்கூட்டணியின் முன்னணி, மாவட்டத் தலைவர்கள் பஙகேற்பார்கள்.

இந்த அணி,  மக்கள் எதிர்பார்த்தக் கூட்டணி, மாற்றம் தரும் கூட்டணி, மகத்தான கூட்டணி, மாபெரும் வெற்றிக்கூட்டணி என்று வைகோ கூறினார்.

விஜயகாந்த்

என்னை கிங் என்றும், மற்றவர்கள் கிங் மேக்கர் என்றும் கூறியிருக்கிறார்கள். இங்குள்ள தலைவர்களுக்கு மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. நான்  தெய்வத்தை நம்புகிறேன். மக்களையும் நம்புகிறேன். எனவேதான் மக்கள் நலக்கூட்டணியோடு கூட்டணி வைத்திருக்கிறேன். தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருப்பார். என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.