திருச்சிராப்பள்ளி, மார்ச் 22 –

திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான தயாபரராஜ் (35), மண்டபம் முகாமில்அடைக்கப்பட்டு உள்ள அவரது மனைவி மற்றும் குழந்தைகளையும்,அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, இலங்கைக்கு அனுப்ப மத்திய பாஜகஅரசும், தமிழக அதிமுக அரசும் முயற்சி செய்து வருகின்றன. இவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், இலங்கைக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று இலங்கை அரசு, இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதை ஏற்றுத்தான், தயாபரராஜ் குடும்பத்தை இலங்கைக்கு அனுப்பநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தன்னையும் தன் குடும்பத்தையும் இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று திருச்சி சிறப்பு முகாமில் உள்ள தயாபரராஜூம், மண்டபம் முகாமில் அடைக்கப்பட்டுள்ள அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் கடந்த மார்ச்18-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை 5-ஆவது நாளாக அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், தயாபரராஜையும், அவரது குடும்பத்தினரையும் இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று வலியுறுத்தி, மக்கள் நலக் கூட்டணியினர், திருச்சி மத்தியச் சிறைச் சாலையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச்செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் சோமு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயாலாளர் சுரேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகரச் செயலாளர் அருள், கிழக்குத் தொகுதி சட்டமன்றப் பொறுப்பாளர் அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறையை முற்றுகையிடுவதற்காக, காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து, ஊர்வலமாக வந்த மக்கள் நலக்கூட்டணிக் கட்சியினரை, போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால், முற்றுகையிடும் போராட்டம் சாலை மறியலாக மாறியது. அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.