திருப்பூர், மார்ச் 14 –

சாதிவெறியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் உடலை வாங்க முடியாது என்றுகூறி, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் சங்கர் (21). தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இதேபோல திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர், சின்னச்சாமி மகள் கௌசல்யா (19). பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இந்நிலையில் சங்கரும், கௌசல்யாவும் ஒருவரை ஒருவர் விரும்பியுள்ளனர். இவர்களின் காதலுக்கு கௌசல்யா வீட்டினர்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த எதிர்ப்பையும் மீறி, கடந்த 8 மாதங்களுக்கு முன் சங்கரும், கௌசல்யாவும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு, குமரலிங்கத்தில் வசித்து வந்தனர்.

காதலித்து வந்த போதே அப்பெண்ணை பெற்றோரும் உறவினர்களும் அடித்து சித்ரவதை செய்து வந்தனர். இதனால் பெற்றோரின் கொடுமைதாங்க முடியாமல் சங்கரை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கௌசல்யா குடும்பத்தினர் தன்பெண்ணை கடத்திவிட்டனர் என்றுகாவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் தன் முழுவிருப்பத்தில்தான் திருமணம் செய்து கொண்டதாக கௌசல்யா கூறியதன் அடிப்படையில் போலீஸ் அந்த வழக்கினை முடித்துள்ளனர். இதன் இடையில் பெண் குடும்பத்தினர் கௌசல்யாவை கடத்தி உசிலம்பட்டியில் அடைத்துவைத்துள்ளனர். சங்கரின் புகாரில் பெயரில் கௌசல்யா மீட்கப்பட்டுள்ளார். இந்த இளம் தம்பதியர் ஞாயிறன்று உடுமலைப் பேட்டையில் பொருட்கள் வாங்கிவிட்டு சாலையைக் கடக்க முயன்றபோது, பின்தொடர்ந்தே வந்த கும்பல்,இருவரையும் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே சங்கர் இறந்தார். கௌசல்யா பலமான வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை சங்கரின் உடலை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்றும்; உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறிஅவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் கட்சிஉள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கொலையாளிகளை கைது செய்யாமல் சங்கரின் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் உறுதிபட தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டக்காரர் களுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். குற்றவாளியை கைது செய்யாமல் சடலத்தை ஒப்படைக்கும் நோக்கிலேயே காவல் துறையினர் முயற்சி செய்வதை கண்டு ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் அருகிலுள்ள திருச்சி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ரம்யா பாரதி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரி கள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை யடுத்து சாலை மறியல் போராட் டத்தை கைவிட்டு, மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் உடலை வாங்கிக் கொள்ளுமாறும், எவ்வளவு விரைவாக குற்றவாளி களை கைது செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக கைது செய் கிறோம் என உறுதியளித்தனர். இதனையடுத்து சங்கரின் பெற் றோர் மகனின் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.

இதன்பின் சங்கரின் உடல் பிரேத பரிசோதனை செய்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.முன்னதாக, இந்தப் போராட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.அமிர்தம், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.பத்ம நாபன், கே.மனோகரன் மற்றும் மாதர், வாலிபர், மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன் மற்றும்சுசி,கலையரசன், தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், ஆதித்தமிழர் கட்சியின் வெண்மணி, வழக்கறிஞர் பன்னீர்செல்வம், கார்க்கி உள்ளிட்ட தலித், முற்போக்கு அமைப்புகளின் தலைவர் கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

உடுமலை

உடுமலையில் படுகொலை நடந்த இடத்தின் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திங்களன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்திற்கு மடத்துகுளம் தாலுகா செயாலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி னார். நிர்வாகிகள் எஸ்.ஆர். மது சூதணன், சி. சுப்பிரமணியம், வெ. ரங்கநாதன், கி. கனகராஜ், ஆர்.வி. வடிவேல், வி. விஸ்வநாதன், எஸ். ஜெகதீசன், வசந்தி, சசிகலா, லோகேஸ் வரன், அன்பழகன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சங்கரின் சொந்த ஊரான குமரலிங்கம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும் திருப்பூர், அவி நாசி உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.

இதனிடையே, படுகாயமடைந்த கௌசல்யா, கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார். அவருக்கு முன் நெற்றியிலும், இடது கையிலும் பலமான காயம் ஏற்பட்டுள்ளது.நினைவுடன் இருக்கும் கௌ சல்யா கணவர் சங்கர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்று மருத்துவர் கள் தெரிவிக்கின்றனர். கௌசல்யா சிகிச்சை பெறும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை களை அமைத்துள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யு மாறு தமிழக அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

வுசல்யா தந்தை நீதிமன்றத்தில் சரண்

இந்த சாதி ஆணவக் கொலையில் தொடர்புடைய சின்னசாமி நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரிசானா பர்வீன் முன்பு சரணடைந்தார். இவர், கௌசல்யாவின் தந்தை ஆவார். அவரை நீதிபதி மார்ச் 22-ஆம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கண்டனம்

வைகோ

சமூக நீதி மலர்ந்த தமிழ்நாட்டில், சாதி மறுப்புத் திருமணம் செய்யும் இடங்களில் கொடூரமான முறையில் சாதிய ஆணவக் கொலைகள் நடப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த சம்பவங்கள் நெஞ்சில் ஈட்டியால் குத்தியதுபோல் உள்ளது.உடுமலைப்பேட்டை சங்கர் கொலை, மனித நேயத்தை ஆயிரம் அடி பள்ளத்திற்குள் குழி தோண்டி புதைத்துள்ளது. எனவே, சமூக நீதிக்கான விழிப்புணர்வை அனைத்து சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஏற்படுத்த வேண்டும். தங்கள் சுயநலத்திற்கு ஆங்காங்கே வேற்றுமை உணர்வை அதிகப்படுத்தி சாதிய மோதலுக்கு வழி வகுத்து கொடுப்பது இந்த சமூகத்தை நாசப்பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

ஜி. ராமகிருஷ்ணன்

கடந்த ஆண்டில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, “தமிழகத்தில் சாதிஆணவக் கொலை தொடர்கதையாக இருக்கிறது. அதை தடுத்து நிறுத்துவதற்கு தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும்“ என்று எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார். அன்றைக்கு தற்காலிகமாக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், “தமிழகத்தில் சாதி ஆணவக் கொலையே கிடையாது. அந்த பிரச்சனைக்கு இடமே இல்லை. தனி சட்டம் ஒன்றும் தேவையில்லை” என்று பதில் கூறினார். ஆனால் அதற்குப் பிறகுதான் கோகுல்ராஜ் படுகொலை, உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை நடந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சங்கர் படுகொலை என்பது 81 வது சாதி ஆணவப் படுகொலை ஆகும். இந்த சாதி ஆணவக் கொலையை கண்டிப்பது மட்டுமல்ல; மக்கள் நலக் கூட்டணி சார்பில் நாங்கள் வெளியிட்டிருக்கும் குறைந்த பட்ச செயல் திட்டத்தில், சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தனியாக சட்டம் கொண்டுவருவோம் என்று கூறியிருக்கிறோம்.

தொல்.திருமாவளவன்

சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் சாதி ஆணவக் கொலைகள் எனும் பெயரால் தமிழகத்தில் இந்த காட்டுமிராண்டித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. குறிப்பாக இந்த 5 ஆண்டுகளில் தென் மாவட்டங்களில் மட்டும் 600 க்கும் அதிகமான படுகொலைகள் நடந்துள்ளன. இதில், 70 விழுக்காடு சாதி ஆணவக் கொலைகள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பொறியியல் படிக்கும் தலித் மாணவர் சங்கர், தலித் அல்லாத வகுப்பை சேர்ந்த மாணவி கவுசல்யா ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களை உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் மிகக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளார்கள்.

இதற்கு அரசியல் ஆதாயம் தேடும் சில சாதிய சக்திகளின் தூண்டுதல்தான் காரணம். வெளிப்படையாக மேடைகளில் பேசுவதும், தமிழகம் தழுவிய அளவில் இந்தக் கருத்தை பரப்புவதும் இதற்கு அடிப்படை காரணங்களாக இருக்கின்றன. இப்படிப்பட்ட வன்முறைகளைத் தூண்டும் வகையில் அரசியல் செய்வோரை அடையாளம் காணவேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் இன்றைய தேவையாக உள்ளது. அரசு இதில் மெத்தனம் காட்டி வருகிறது. இப்படிப்பட்ட கொடுமைகளை தடுப்பதற்கு அரசு எந்த முனைப்பையும் காட்டவில்லை; எனவே தான், சாதி ஆணவக் கொலையை தடுப்பதற்கு தனிச் சட்டம் ஒன்றை கொண்டுவரவேண்டும் என்கிறோம்.

சென்னையில் அளித்த பேட்டியிலிருந்து….

Leave a Reply

You must be logged in to post a comment.