புதுச்சேரி, மார்ச். 7-
என்.ஆர். காங்கிரஸ் அரசு கடந்த 5 ஆண்டுகளில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததே சாதனை என்று கூறிக் கொள்கிறதே தவிர மாநிலத்தின் நிதி நிலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் நலக் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.
புதுச்சேரியில் கொல்லைப்புற நியமனங்களை மேற்கொள்ளும் என்ஆர். காங்கிரஸ் அரசை கண்டித்து மக்கள் நலக்கூட்டணி சார்பில் வில்லியனூர் துணை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய விடுதலைச் சிறுத்தைகள் முதன்மைச் செயலர் தேவ.பொழிலன் பேசுகையில், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுவையின் வளர்ச்சியைத் தடுத்ததாக முதல்வர் ரங்கசாமி குற்றம் சாட்டினார். கடந்த 2 ஆண்டுகளில் மத்தியில் மோடி ஆட்சி இருந்தும் எவ்வளவு நிதியைப் பெற்றார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
புதுச்சேரியில் பான்பேப், பாப்ஸ்கோ, கேவிகே நிறுவனங்களில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் தர முடியாத சூழல் உள்ளது. தற்போது கொல்லைப்புறமாக நியமிக்கப்பட்டோருக்கு எவ்வாறு ஊதியம் தர முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினர்.
வெ.பெருமாள்
சிபிஎம் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள்,”வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 5 அமைச்சர்களும் அதிகாரம் மிக்கவர்களாக விளங்கினர். தங்கள் சொந்த வீடுகளுக்கே வாடகைப்படியைப் பெற்றுக் கொண்டனர்.இதன் காரணமாக மக்கள் காங்கிரஸ் கட்சியை அகற்றி, ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினர். முதல்வராக அவர் ஒருவர் மட்டுமே முதலில் பதவியேற்றார். மற்றவர்கள் பின்னர் தான் நியமிக்கப்பட்டனர். இதில் இரண்டாவது அமைச்சர் பட்டியலில் கல்யாணசுந்தரம் பதவியேற்றார். தேர்வு முறைகேட்டால் பதவியேற்ற சில மாதங்களிலேயே அவர் நீக்கப்பட்டார். இத்தகைய நிர்வாகத் திறனற்ற ஆட்சியாகத் தான் ரங்கசாமி அரசு நீடித்து வந்துள்ளது” என்றார்.
தேர்தல் வாக்குறுதிகள் எதையும் முழுமையாக இந்த அரசு நிறைவேற்றவில்லை. தொடர்ந்து 4 ஆண்டுகள் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ததே இந்த அரசின் சாதனையாகும். நிதி ஆதாரத்தைப் பெருக்க ரங்கசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நாரா.கலைநாதன்
இந்திய கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன்,”புதுச்சேரி இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை. அரசு மருத்துவக்கல்லூரி, பொதுப்பணித்துறையிலும் பல இளைஞர்களை கொல்லைப்புறமாக நியமித்துள்ளனர். அவர்களின் சான்றிதழ்களை கூட முறையாக சரிபார்க்கவில்லை. வருவாய்த்துறையினர் அவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும். கையூட்டு பெற்றுக் கொண்டு கொல்லைப்புற நியமனத்தை செய்து வருகின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகம் இருக்கும் போது, சட்டப்பேரவையே வேலைவாய்ப்பு அலுவலகம் போல் செயல்பட்டது”என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலர் ஆர். ராஜாங்கம், ஆர்எஸ்பி மாநிலச் செயலாளர லெனின், மதிமுக பொறுப்பாளர் செல்வராஜ், விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி வணங்காமுடி உள்ளிட்ட பலர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.