சிஐடியு தபன்சென் கார்ப்பரேட் துறையினருக்கு மேலும் சலுகைகள் வாரி வழங்கியிருப்பதை மூடிமறைப்பதற்காக படாடோபமான வார்த்தைகளை பட்ஜெட் முழுவதும் “மத்திய நிதி அமைச்சர் அள்ளித் தெளித்திருக்கிறார். உலகப்பொருளாதாரமும், உலக முதலாளித்துவ அமைப்புமுறையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகிவரக்கூடிய சூழலில், பட்ஜெட்டில் கூறப்பட்டிருக்கிற பொது உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடியை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் காரணிகளுடன் பொருத்திப் பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.

வேடிக்கையாகும் வேலைவாய்ப்பு

கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசியைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையையும் அறிவிக்காத நிதியமைச்சர், பணவீக்கம் சரிந்துவிட்டதாக தம்மைத்தாமே தட்டிக்கொள்கிறார். ஆனால் மக்களின் அன்றாட வாழ்க்கையோ வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது. படித்த இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வேலையின்றி வீதியிலேயே அலைந்துகொண்டிருக்கையில், திறமை வளர்ச்சி மையங்களைத் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று கூறியிருப்பதன் மூலம் எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை. அரசாங்கத்தில் வேலைக்கு ஆள்எடுப்பதற்கான தடை நீடிக்கக்கூடிய சூழலில், பல தொழில் நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வேலைகளிலிருந்து நீக்கப்பட்டு வரக்கூடிய சூழலில், முதலாளிகளுக்கு மூன்றாண்டுகளுக்கு சேமிப்பு நிதிக்காக ஒரு தொகை அளிக்கப்படும் என்று கூறியிருப்பதன் மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்கமுடியும் என்பது வேடிக்கையாகும்.

பொதுத்துறைகளுக்கு சாவுமணி

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் பங்குகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் என்று கூறியிருப்பதானது பொதுத்துறைகளுக்கு சாவுமணியடிக்கக்கூடியவைகளாகும். தனியாருக்குத் தாரைவார்க்கும் துறை என்பது மிகவும் கபடத்தனமாக முதலீடு மற்றும் பொது சொத்துக்கள் மேலாண்மைத்துறை என்று மாற்றப்பட்டிருக்கிறது.வளமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேலும் விரிவான அளவில் நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கின்றன. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கு சந்தைப்படுத்த 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு வகை செய்யப்பட்டிருக்கிறது. பொதுத்துறை போக்குவரத்து நிறுவனங்களுக்கு முற்றிலுமாக சாவுமணிஅடிக்கக்கூடிய விதத்தில் தனியாரை அனுமதிக்கக்கூடிய விதத்தில் மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட இருக்கிறது. பொதுசுகாதாரத் திட்டத்தில் அரசுக்கு இருந்துவந்த கொஞ்சநஞ்ச பொறுப்பையும் கைகழுவக்கூடிய விதத்தில் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

1லட்சம் மெகாவாட் மின் திட்டங்கள் என்னாயிற்று?

கிராமப்புற மின்மயம் விரைவுபடுத்தப்படும் என்று அறிவித்திருப்பது பாராட்டத்தக்கதே. ஆனால், இன்றையதினம் சுமார் ஒரு லட்சம் மெகாவாட் மின்உற்பத்தி திட்டங்கள் செயல்பாடின்றி இருக்கின்றன. இதனைச் சரிசெய்யாமல், தற்போதுள்ள அதீத மின்கட்டணங்களைக் குறைக்காமல், மக்களின் வாங்கும் சக்தியைப் பெருக்காமல் வெறுமனே மின் இணைப்பு கொடுப்பதாகச் சொல்வதால் எந்த உதவியும் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை.

ஏமாற்றியவர்களுக்கு சுதந்திரம்

பொதுத்துறை வங்கிகளுக்கு கார்ப்பரேட் துறையினர் அளிக்கவேண்டிய தொகைகளை வசூலிக்க வலுவான நடவடிக்கை எதுவும் எடுக்காது, அரசாங்கம் பொதுத்துறை வங்கிகளைக் காப்பாற்றுவதற்காக மேலும் தொகைகள் அளிக்க இருப்பதாகக் கூறியிருக்கிறது. பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றிய கார்ப்பரேட் துறையினர் சுதந்திரமாக செல்வதற்கே இது உதவிடும்.

பி.எப்.களுக்கும் வரி விதிப்பா?

மத்திய நிதி அமைச்சர் கார்ப்பரேட் வரிகளைக் குறைத்திட அறிவிப்புகளைச் செய்திருக்கும் அதே சமயத்தில் வருமானவரி உச்சவரம்பை அதிகரிக்கவில்லை. இது லட்சக்கணக்கான மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களைக் கடுமையாகப் பாதிக்கும். அதுமட்டுமல்லாத தொழிலாளர்களின் ஆயுள்கால வருங்கால வைப்பு நிதிக்கு வரிவிதிக்கப்பட்டிருக்கிறது.நேரடி வரியை குறைத்திருப்பதன் மூலம் வருவாய்இழப்பு 1060 கோடி ரூபாய்களாகும்.

இத்துடன் 20 ஆயிரத்து 670 கோடி ரூபாய்க்கு சாமானிய மக்கள் மீது மறைமுக வரிமூலம் மேலும் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன.விவசாயத்துறையில் விவசாயிகளின் தற்கொலைகள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் விவசாயத்துறைக்கு அளித்திருக்கும் சலுகைகள் வெறும் கண்துடைப்பேயாகும்.

கைவிடப்பட்ட ஊழியர்கள்

மத்திய அரசு முறைசாராத் தொழிலாளர்களையும் திட்டப் பணிகளில் பணியாற்றும் ஊழியர்களையும் மீண்டும் உதாசீனப்படுத்தியிருக்கிறது. லட்சக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள், `ஆஷா’ ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்கள், இதர திட்டப்பணி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்களை அறிவிக்காமல் பட்ஜெட் முழுமையாக அவர்களை கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டது. பட்ஜெட்டுக்கு முன் தொழிற்சங்கங்கள் அரசிடம் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் கண்டுகொள்ளப்படவேயில்லை. ஆனால் அதே சமயத்தில் முதலாளிகளின் கோரிக்கைகள் மட்டும் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.கடைகள் மற்றும் சிறுநிறுவனங்களில் வேலைபார்த்து வந்த தொழிலாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை இருந்துவந்ததைக்கூட இந்த பட்ஜெட் ஒழித்துக்கட்டிவிட்டது.

இந்த பட்ஜெட் நவீன தாராளமய நிகழ்ச்சிநிரலுக்கு வெண்சாமரம் பூசி, சாமானிய மக்கள் மற்றும் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து, கார்ப்பரேட் மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்களின் முதலாளிகளைத்தான் குஷிப்படுத்தி இருக்கிறது.

(பட்ஜெட்டை விமர்சித்து சிஐடியு மத்திய செயற்குழு சார்பில் தபன்சென் வெளியிட்ட அறிக்கையிலிருந்து…)

Leave a Reply

You must be logged in to post a comment.